பக்கம்:அகமும் புறமும்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட அமைச்சன் • 335

யான அன்பு பாராட்டாமல், தன்னுடைய நலத்தையே பெரிதென மதிப்பானாகில், அதனால் நாட்டிற்கு எத்துணைப் பெரிய தீமை ஏற்படும் என்பது கூறவும் வேண்டுமோ? அமைச்சன் இரண்டு பெருங்காரணங்கள் பற்றியும் தூய்மையும் அன்பும் உடையவனாய் திகழலாம். இயற்கையிலேயே அரசன்மாட்டுப் பற்றும் அன்பும் உடையனாய் இருத்தல் ஒன்று; பழி நாணும் பண்பாட்டால் நல்லனாய் இருத்தல் இரண்டாவது. தன் கடமையை உணர்ந்து நன்மையை நன்மைக்காகவே கடைப்பிடித்தல் முதல் முறையாகும். ‘நற்புடை அமைச்சர்’ என்று பெருங்கதை கூறும் பொழுது நன்மையை உடைய அமைச்சர் என்றே பொருள் கொள்ள வேண்டியுள்ளது. இதனையடுத்து, ‘நெஞ்சுபுரை அமைச்சர்’ என்று கூறுவதும் இத்தகைய மன நிலையைக் கருதியேயாம்.

குடிப் பிறப்பு

இயற்கையாகவே தீமையிலிருந்து நீங்கின மனப்பான்மையுடன், தீமை புரிய அஞ்சுகிற மனப்பான்மைகள் சில உண்டு. நன்மை புரிவதால் ஏற்படும் நற்பயன்களைக் கருதி விரும்பியோ, தீமை புரிவதால் ஏற்படும் தீப்பயன்களைக் கண்டு அஞ்சியோ, இத்தகையோர் ஒன்றைச் செய்வதில்லை. நன்மை புரிதலும், நம்பிக்கையுடன் நடத்தலும், சொன்ன சொற்களைக் காத்தலும், பிறர்மாட்டு அன்பு கொள்ளுதலும் இவர்கள் உடன்பிறந்த பண்பாடுகள். நன்மையை நன்மைக்காகக் கடைப்பிடிக்கும் தலையாய பண்புடையார் இவர். இப்பண்பாடுகள் பெரும்பான்மை நற்குடிப் பிறப்பினால் உண்டாவன. மனிதனுடைய பண்பாடுகளுள் சில இயற்கையாய்ப் பிறப்பிலேயே உறுவன; ஏனைய சில, வாழும் பொழுது பெறுவன. இங்குக் கூறிய அனைத்தும் பிறப்பில் தோன்றுவனவாகலின், நற்குடிப்பிறப்பு என்று ஒரு