பக்கம்:அகமும் புறமும்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

352 • அகமும் புறமும்

இனத்தையே சேர்ந்தவர்கள். கேவலம் சில கோடிப் பொருளைச் சேகரிப்பதே வாழ்க்கையின் குறிக்கோள் என்று தவறாக உணர்ந்த இவர்கள், அப்பொருளைச் சேகரித்தவுடன் வேறு வாழ்க்கையில் சுவையுண்டு என்பதை அறிய முடிவதில்லை. காரணம் மிக இன்றியமையாதது. மனம் எப்பொழுது இன்பத்தைக் காண்கிறது. ஒரு குறிக்கோளை நாடி அடைய முற்படும் பொழுது மனத்திற்கு இன்பம் பிறக்கிறது. ஆனால், எந்தச் சந்தர்ப்பத்தில் இவ்வின்பம் என்று ஆய்தல் வேண்டும். குறிக்கோளையடையச் செய்யும் முயற்சியில் இன்பமே தவிர, அடைந்து விட்ட பிறகு அங்கு இன்பம் என்ற ஒன்றும் இல்லை. எனவே, முயற்சியிலேதான் இன்பம் என்றால், அம்முயற்சி வாழ்நாள் முழுதும் நீடித்ததாக இருத்தல் வேண்டுமே தவிர, இடையே பயன்தரக் கூடியதாய் அமைந்துவிடின் முற்கூறியபடி வெறுப்பே மிஞ்சும். இது வாழ்க்கையின் எல்லா முயற்சிகட்கும் பொதுவான நீதியாகும்.

உயர்ந்த குறிக்கோள்

இந்த முடிபை மனத்துள் இருத்திக்கொண்டுதான் எத்தகைய குறிக்கோள் சிறந்தது என்னும் ஆராய்ச்சியைத் தொடங்க வேண்டும். ஒருவன் வாழ்நாளில் எளிதாக அடைந்துவிடக் கூடியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டால், நேரும் இழுக்கைக் கண்டோம். அவ்வாறாயின், அடையமுடியாத குறிக்கோளை மேற்கொள்வதால் என்ன பயன் என்று கேட்கப்படலாம். ‘குறிக்கோள்’ என்பதற்குப் பொருளே, ‘எளிதில் அடைய முடியாதது’ என்பதாகும். பொதுமறை தந்த பெரியாரின் கட்டளையை உற்று நோக்குவோம்.

உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்; மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.
குறள்–596)