பக்கம்:அகமும் புறமும்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

358 • அகமும் புறமும்

கள் நாகரிகரும் அல்லர்; இவர்கள் பண்பாடு நாகரிகமும் அன்று என்பது நன்கு அறியப்பட வேண்டும்.

உலகம் வாழக் காரணம்

உலகம் வாழ்வதற்கு உரிய காரணத்தைக்கூற வந்த வள்ளுவப் பெருந்தகையார்,

‘பண்புடையார்ப் பட்டுஉண்டு உலகம்; அஃதுஇன்றேல்,
 மண்புக்கு மாய்வது மன்.’

(குறள்–996)

என்று கூறினார்.

பண்புடையவர் இருத்தலினாலேதான் உலகம் நடை பெறுகிறது என்று அவர் கூறும் பொழுது, நாகரிகம் உடையவர்களையே குறிப்பிடுகிறார். ‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்,’ என்று கலித்தொகை கூறுவது இக் கருத்தையேயாம். பிறருடைய இயல்பறிந்து அதற்கேற்ப நடத்தலையே ‘பாடறிந்து’ என்று கூறுகிறார் அந்த ஆசிரியர். தனக்கு என வாழாமல் பிறர்பொருட்டு வாழ்வதே நாகரிகம் எனப்படும் என்பது தெளிவு. எந்த அளவு வரை ஒருவன் தன்னலத்தைப் பேணிக் கொள்ள வேண்டும் என்ற வினாவிற்கு விடை கூறுவது சற்றுக் கடினந்தான். வேறு வகையாகக் கூறுமிடத்து ஒருவனுடைய நாகரிகம் எவ்வளவு என்பதை எவ்வாறு அளவிட்டுரைப்பது என்பதே இவ்வினாவாகும், பெரிய படிப்புப் படித்துவிட்டு வேற்று நாடுகட்குச் சென்றுவிட்டு மீட்டும் இந்த நாட்டையும் இதில் வாழும் மக்களையும் ஏற இறங்கப் பார்க்கும் பெரியோர்தாம் இன்று நாகரிகத்தில் மேம்பட்டவராகக் கருதப்படுகின்றனர். பிறருக்காகத் தம்மையே தியாகம் செய்வதுதான் நாகரிகம் என்றால் இவர்களுடைய நாகரிகத்தை எவ்வாறு மதிப்பிடுவது? தமிழன் நாகரிகம் பற்றிக் கொண்ட கருத்தை ஏறத்தாழ