பக்கம்:அகமும் புறமும்.pdf/366

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட உண்மைகள் • 359

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய நற்றிணை இதோ கூறுகிறது.

‘முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்.’

(நற்றிண–355)

‘நட்புக் கொண்டவர்கள் எதிரே இருந்து கொண்டு நஞ்சை ஊற்றி ‘உண்க’ எனத் தந்தவிடத்தும், சிறிதும் மனங்கோணாமல், முகத்தைச் சுளிக்காமல் உண்பதே நாகரிகம்,’ என்பது கருத்து. இதே கருத்தைத்தான் வள்ளுவப் பெருந்தகையாரும்,

‘பெயக்கண்டும் நஞ்சு உண்டு அமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்.’
(குறள்–580)

என்று கூறுகிறார். ‘மகாத்மா காந்தி’, ‘ஸாக்ரட்டிஸ்’ போன்றவர்களே நாகரிகம் உடையவர்கள்’என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது. எனவே, மீட்டும் பழைய வினாவைக் கேட்போம். உலகம் எதனால் வாழ்கிறது என்றால், இத்தகைய நாகரிகம் உடையவர்கள் இருப்பதனாலேதான் என்று எளிதாக விடை கூறிவிடலாம்.

வழுதி கூறுகிறான்

‘கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி’ என்பவன் கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டு நூற்றாண்டுகள் முன்னர் வாழ்ந்தவன். வழுதி என்பதால் பாண்டியன் என்பதும், ‘இளம்பெரு’ என்ற அடைமொழியால் ஆட்சி செய்யும் அரசனுக்கு அடுத்த உரிமையில் இருந்தான் என்பதும் அறியப்படும். அரசனாக மட்டும் இல்லாமல், பெரும்புலமை வாய்ந்தவனாகவும் இருந்துள்ளான் அப்பெருமகன். அவன் பாடிய ஒரே ஒரு பாடல்தான் இன்று நமக்குக் கிடைத்து உள்ளது. ‘கடலுள் மாய்ந்த’ என்ற அடைமொழி