பக்கம்:அகமும் புறமும்.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட உண்மைகள் • 373


இப்பாடல் தொடர்வழி மிக உயர்ந்த, கர்ப்பக் கிரகத்தோடு கூடிய திருக்கோயில்களே சங்க காலத் தமிழர் சமைத்து வாழ்ந்தனர் என்று அறிய முடிகிறது.

கோயில் வழிபாட்டு முறையில் ஏதோ சில சடங்குகளைச் செய்து சமயம் என்ற பெயரிட்டு வாழ்ந்தனர் என்று நினைப்பது பெருந்தவறாகும்.

சமய வாழ்க்கையின் உயிர்நாடியாக உள்ள பக்தி என்பது இத்தமிழர்கள் அனைத்து உலகத்திற்கும் அளித்த பெருங்கொடை ஆகும்.

வேதத்தில் பக்தி என்ற சொல்லுக்கே இடமில்லை என்று அறிய முடிகிறது.

உபநிடதங்கள் அறிவின் துணைகொண்டு உண்மைப் பொருளை ஆராயத்தொடங்கின. வேதங்களை அடுத்து வந்த பெளத்தம் சமணம் என்ற இரண்டிலும் பரம்பொருட் கொள்கை இன்மையால் அங்கு பக்திக்கே இடம் இல்லை.

இந்நிலையில் வேதகாலத்துக்கு முன்னும், வேதகாலத்திலும், பின்னும் வீறுபெற்றிழந்த தமிழர், தம்சமய வாழ்க்கையில் பக்தி என்பதனை நன்கு உணர்ந்திருந்தனர்.

பக்தியின் அடிப்படையே தன்னை மறத்தலும், தன்னைத் தியாகம் செய்தலும் ஆகும். ஒரு குறிப்பிட்ட பயனைக் கருதிச் செய்யப்படுகின்ற யாகம் முதலியற்றுள் உயர்ந்த குறிக்கோள் இருப்பதாகச் சொல்ல முடியாது.

ஆனால் சமய வாழ்க்கையர் இன்று ஆண்டவனை வேண்டி “பல்வேறு நலன்களை அடைய வேண்டும்; பொன், பொருள், புகழ் முதலாயின அருள்க” எனக்கோரக் காண்கிறோம்.