பக்கம்:அகமும் புறமும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அகம் - அகத்தின் அடிப்படை • 31

நிச்சயமாக இவன் இணை விழைச்சைக் குறிக்கவில்லை என்பது தெளிவு என்று அறிய முடியும்.

எனவே இத்தமிழர் கண்ட காதல், காமம் என்பன உலகின் பிறநாட்டார் கனவினும் சிந்திக்காத ஒன்று; ஒர் ஒப்பற்ற கருத்து என்று முன்னர்க் கூறியது இப் பாடல்களால், (அகம், குறுந்தொகை, திருக்குறள்) தந்துள்ள விளக்கங்களால் வலியுறுத்தப் பெறல் காணலாம்.

வீட்டு ஆட்சி அவளுடையதே!

இத்துணையளவு பண்பட்டுவிட்ட தலைவன், தன் மனத்துக்கிசைந்த மங்கை நல்லாளுடன் இல்லறம் தொடங்குகிறான். வீட்டு வாழ்க்கையில் நல்ல அனுபவம் பெற்ற தமிழர் தலைவனுடைய உரிமைக்கும் அதிகாரத்திற்கும் வரம்பு கட்டினர். வீட்டினுள் தலைவன் தலைவி என்ற இருவர் இருப்பதால் கொண்டு செலுத்தும் உரிமை யாருடையது என்ற வினாத் தோன்றுமன்றோ? இருவரும் அதிகாரம் செலுத்தத் தொடங்கினால் அது இரட்டை ஆட்சியாக (Dual Government) மாறித் தீமை பயக்குமே தவிர நன்மை பயவாது. எனவே, பெருமையும் உரனும் தன்னியல்பாகக் கொண்ட தமிழ் மகன், வீட்டு ஆட்சியைத் தலைவியிடம் ஒப்படைத்து விட்டான். அதனால், அவளுக்கு இல்லாள் என்ற பெயர் தோன்றலாயிற்று. எல்லாப் பெண்பாற் பெயர்கட்கும் ஆண்பாற் பெயர் ஒன்றைக் கூறும் தமிழ் மொழியில் இல்லாள் என்பதற்கு ஏற்ற ஆண்பாற்பெயரே இல்லாது போயிற்று. இது எதனை உணர்த்துகின்றது? வீட்டைப் பொறுத்தவரை அவளே அரசி என்பதையும் வீட்டினுள் தலைவனுடைய அதிகாரம் செல்வதில்லை என்பதையும் உணர்த்துகின்றதன்றோ? ஆண்மகன் தன் மதிப்பை இன்னுங் கொஞ்சம் விட்டுக் கொடுத்துவிட்டான். வீடு வைத்தமையின் அவனுடைய அகங்காரம் பெரும்பகுதி அழியத் தொடங்கி