பக்கம்:அகமும் புறமும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகம் – அகத்தின் அடிப்படை • 33

நினைத்திருந்த தலைவனுக்கு இவ்வின்பம் புதுமையாய் உளது. அவன் தனது இன்பத்தை விட்டுக் கொடுத்துப் பிறருக்கு மகிழ்வூட்டப் பழகுகிறான். இதனால், மேலும் அவனுடைய மனம் விரிவடைகின்றது.

குறிக்கோள் மாற்றம்

இவ்வாறு பிறருக்காக வாழ்வதில் இன்பங் காணத் தலைப்படுவதால் விரிவடைந்த அவனது மனம், தன் குடும்பம், சுற்றம், அண்டை வீட்டார், தெருவார், ஊரார், நாட்டார் என்ற முறையில் விரிந்துகொண்டே செல்கிறது. இறுதியில் அவன்,

யாதும் ஊரே; யாவரும் கேளிர்
(புறம்–192)

என்ற உணர்வைப் பெறுகின்றான். இதுவே மனிதன் பெறுகின்ற முழு வாழ்வாகும். தன்னல வடிவாய் இருந்த மனிதனைப் பிறர் நலம் பேணும் பெருந்தகையாக மாற்றியது இல்லறம் என்னும் நல்லறம். தான் பெறும் இன்பம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருந்த மனிதனுக்கு அக்குறிக்கோள் நாளாவட்டத்தில் மாறத் தொடங்குகிறது. நல்ல முறையில் இல்லறம் நடத்திவரத் தொடங்குகையில் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் ஆவதே அவனது குறிக்கோளாக மாறிவிடுகின்றது. இத்தகைய உயர்ந்த பண்பை அகவாழ்வு நல்குவதாலேதான் புறத்தைவிட அகத்திற்கு அதிக மதிப்புத் தந்தனர் தமிழர்.

இல்லறத்தின் பயன் தன்னலத்தை ஒழித்து வாழ்தலே என்பதைக்கண்டோம். தன்னலம் சிறிது ஒழியத் தொடங்கு கையில் அவ்விடத்தில் அன்பு பிறக்கின்றது என்பதையும் கண்டோம். இறுதியாக அவனுடைய குறிக்கோள் மாறுபட்டுத் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளனாக மாறும் பொழுது அன்பு என்ற சிறிய பொருள் இருந்த அவன் உடைய மனத்தில் ‘அருள்’ என்னும் புதிய ஒளி தோன்று-