பக்கம்:அகமும் புறமும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 • அகமும் புறமும்

வற்றையும் ஊன்றி நோக்கின், ‘அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை' என்பதன் பொருள் ஆழம் விளங்காமற் போகாது.

அறம் என்பது யாது?

மேல் அதிகாரத்தில் அறத்தின் சிறப்பையும், உயிர்கள் அறஞ்செய்யவேண்டிய இன்றியமையாமையையும் நன்கு வலியுறுத்தினார். ‘செயற்பாலது ஓரும் அறனே, அறத்தான் வருவதே இன்பம்,‘ என்றெல்லாம் கூறி, அறன் வலியுறுத்தினால், ‘அறன் என்பது யாது?’ என்ற வினாத் தோன்றத்தானே செய்யும்? அவ்வினாவிற்கு விடை கூறுவார் போல ‘அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை’ என்கிறார் ஆசிரியர்; ‘எனப்பட்டது‘ என்று கூறுவதால் ‘அறம்’ என்றாலும் ‘இல்வாழ்க்கை‘ என்றாலும் ஒன்றே என்பதைப் பெற வைக்கிறார். இவை இரண்டும் ஒரு பொருள் குறித்த இரு சொல் என்ற பொருளும் அங்குக் காண்க. இனியும் ஐயப்படுவார் இருப்பின், அவர் தம் ஐயத்தினையும் அறுத்தற்கு ‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல் வாழ்க்கை பண்பும் பயனும் அது,’ என்ற குறளால் இல்வாழ்வின் பயன் அறமாகும் என்றும் கூறினார். ‘இல்வாழ்வு’ அல்லது ‘அறம்’ என்னும் பயன் விளைய வேண்டுமாயின், ஒரு பண்பு வேண்டும்; அதுவே அன்பு என்பது. அன்பு என்னும் பண்பு அறம் என்னும் பயனை விளைக்கிறது. வேறு ஒரு வகையாகக் கூறுமிடத்து அன்பினில் அறம் தோன்றுகிறது என்னலாம். அன்பில்லாவிடத்து அறம் தோன்றாது. அன்பு, இல்வாழ்வில் தோன்றும் என்றால், அறமும் அங்கேதானே தோன்றும்? எனவே, எவ்வகையில் கண்டாலும் சமுதாய வளர்ச்சிக்குக் காரணமான இல்வாழ்வையே வள்ளுவர் போற்றிக் கூறுகிறார் என்பது நன்கு விளங்கும். இனி, அதுவே உலகிடை வாழும் வாழ்க்கையில் சிறந்தது என்பதை வேறொரு வகையிலும் கூறுகிறார். ‘அறன்