பக்கம்:அகமும் புறமும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் கண்ட அகவாழ்வு • 39

எனப்பட்டதே இல்வாழ்க்கை’, என்று கூறிய குறளின் அடுத்த பாடலாகக் காட்சியளிப்பது எது? ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்’ என்ற அருங்கருத்தன்றோ? வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல் என்பது இல்லறத்தில் நிற்றலே என்பதற்கு இதை விட வேறு என்ன கூறமுடியும்? ‘வாழ்வாங்கு’ என்பதற்குப் பரிமேலழகரும் ‘இல்லறத்தோடு கூடிவாழும் இயல்பினால்’ என்றுதானே பொருள் கூறுகிறார்? இதுகாறுங் கூறியவாற்றான் வாழ்க்கையில் செம்மையானது இல்லறமே என வள்ளுவர் கருதிக் கூறியது அறியப்படும். இனி அவ்வில்லறம் அமைய வேண்டும் முறைபற்றிக் காணலாம்.

அன்பில்லாத இல்லறம்

குறள் கண்ட செம்மையான வாழ்க்கை இல்வாழ்க்கையே என்பதைக் கண்டோம். இல்வாழ்க்கை என்று கூறினவுடன் எத்தனை குடும்பங்கள் மனக்கண்முன் தோன்றுகின்றன! ஆம்! பொருந்தாக் குடும்பங்களைத்தான் கூறுகிறேன். ‘வற்றல் மரம் அனையானுக்கு இந்த மானை வகுத்திட்ட பிரமனை யான் காணப்பெறின் அற்ற தலை போக அறாத தலை நான்கினையும் பற்றித் திருகிப் பறியேனோ!‘ என்று ஒளவைப் பாட்டி பாடினாளாம் ஒரு பொருந்தாக் குடும்பத்தைப் பார்த்து விட்டு. பாவம்! பாட்டி இக்காலத்தில் இருந்திருந்தால் முற்பகுதியைப் பன்மையாக வைத்தன்றோ பாடியிருப்பாள்! அமெரிக்காவைச் சற்றுப்பாருங்கள்! ஆம்! பணத்தில் புரண்டு ஒப்பற்ற கொழுப்பில் கூத்திடும் அமெரிக்காதான்! மூன்று திருமணங்களில் இரண்டு வீதம் திருமண விடுதலை பெறுகின்றனவாம்! ஏன்? வாழ்க்கையின் அடிப்படை தெரியாமையாலேதான். ‘அன்பும் அறனும் உடைத்தாயின்’ அன்றோ அது இல்வாழ்க்கை எனப்படும்? இவை இரண்டும் சிறு அளவும் இல்லாது நடைபெறும் வாழ்க்கையை என் என்பது? அது ஒரு வகைக் கூட்டு