பக்கம்:அகமும் புறமும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44 • அகமும் புறமும்

வெளியிற் போகவிடாது காப்பாற்றுவேன் என்று ஒருவன் புறப்படுவது எத்துணைத் தவறானது! இங்ஙனம் காவல் புரியத் துணிவது ஒரு பயனையும் விளைக்காது. போவது ஒரு புறம் இருக்க, அதற்கு எதிர்ப்பயனைச் செய்தலுங் கூடுமன்றோ? ஓயாது ஐயுற்ற மனம் வெறுப்புக் காரணமாக வேனுங்கூடத் தவற்றை இழைக்க முற்படலாம் அன்றோ? மனித மனம் இவ்வளவு ‘விந்தை’ நிறைந்தது! தடுப்பில் வழி அடங்கி இருக்கும் குழந்தைகூட, ஓயாது ஒருவர் தடுத்துக் கொண்டிருந்தால் அத்தவற்றைச் செய்ய முற்படுதல் கண்கூடு. எனவே, இத்தகைய காவல் ஒரு பயனையும் தாராது என்றார். அன்றியும் மனத்துாய்மையுடையான் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் ஒருவன் இத்தகைய இழி செயலில் இறங்குதல் தகுமா? அவனவனுடைய மனத்துய்மையைப் பார்த்துக் கொள்வதற்கு ஒரு வழி இதுதான், காரணமின்றியும் அற்பக் காரணங்களைக் கொண்டும் பிறர் மேல் ஐயம் கொள்ளும் ஒருவன், தன்னை மனத்துக் கண் மாசில்லாதவன் என்று எவ்வாறு கூறிக்கொள்ள இயலும்! ‘என்னளவிற் காவல் செய்யத் தேவை இல்லை; காவலே வேண்டாவா?’ என்றால் அதற்கும் விடை கூறுவார் போல ஆசிரியர் ‘மகளிர் நிறை காக்கும் காப்பே தலை,’ என்கிறார்.

மனத்துக்கண் மாசில்லாத ஒருவனும் ஒருத்தியும், தம்முள் கருத்து ஒருமித்து இல்வாழ்வில் ஈடுபடுவதே அறம் என்றும், அவ்வாழ்வில் முழு நம்பிக்கையுடன் இருப்பதே அவ்வறத்தின் அடிப்படை என்றும் காணலாம். இனி இங்ஙனம் வாழும் வாழ்க்கை சமுதாயத்திற்கு உறுதுணையாக எங்ஙன் அமைகிறது என்பதைக் காண்போம்.

வாழ்வின் பயன்

மனத்துக்கண் மாசு இல்லாத ஒருவனும் ஒருத்தியும், தம்முள் கருத்து ஒருமித்து இல்வாழ்வில் ஈடுபடுகிறார்கள்