பக்கம்:அகமும் புறமும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் கண்ட அகவாழ்வு • 45

என்றால், அதுவே அறவாழ்க்கை என்று கண்டோம். இத்தகைய வாழ்க்கையின் பயன் என்னை? பெறுதற்கரிய செல்வம் ஒன்றை அடைதலாம். வற்றல் மரம் போல உள்ள வாழ்க்கை தளிர்ப்படைய வேண்டப்படுவது யாது? வாழ்க்கையென்னும் போராட்டத்தில் அலைப்புண்டு தத்தளிக்கும் மனத்திற்கு அமைதி வேண்டுமானால், எங்கே செல்வது? அறவழி நிற்கும் ஒருவன் இல்வாழ்க்கை அவனுக்கும் பிறருக்கும் பயன்பட வேண்டுமாயின், ஒரு செல்வம் அவன்மாட்டு இன்றியமையாது இருத்தல் வேண்டும். அவ்வரிய செல்வம் ‘மக்கட்பேறு' என்று கூறப்படும். எத்துணைச் சிறப்புடைய வாழ்க்கையாயினும், மக்கட்செல்வம் இல்லாத வாழ்க்கை சுவையற்றதுதான்.


... ... இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும் தொட்டும் கௌவியும் துழந்தும்,
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லை தாம் வாழும் நாளே
                                                                 (புறம்–188)

என்று பாண்டியன் அறிவுடை நம்பி கூறியது ஆழ்ந்து சிந்திக்கற்பாலது. குழந்தைச்செல்வம் பெற்ற பின்னர்த் தான் மனித மனம் விரிவடைகிறது. தன்னலம் ஒன்றால் சூழப்பட்டுள்ள மனித மனம் விரிவடைந்து, அன்பெனும் நலத்தால் பிறரைக் கட்டித் தமர் போல நேசிக்கிறது. சொல்வதற்கு மிக எளிதாக உள்ள இச்செயல், செய்வதற்கு மிகவும் அருமையானது என்பது கூற வேண்டா, பிறரைத் தமர் போல நேசிக்கும் நிலை ஒருவனிடம் வரவேண்டுமாயின், அப்பழக்கத்திற்கு முதற்படி, இல்வாழ்விலேதான் அமைந்து கிடக்கிறது. பிறருக்காகத் தன்னலத்தை விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை குடும்பத்திலல்லாமல் வேறு எங்கே தோன்ற முடியும்?