பக்கம்:அகமும் புறமும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46 • அகமும் புறமும்


மக்கட் செல்வம்

இல்வாழ்க்கையிலும், குழந்தைச்செல்வம் ஏற்பட்ட பிறகு அக்கணவனும் மனைவியும் அடைகின்ற மன மாறுதலை நாம் உலக அனுபவத்தில் நன்கு காணலாம். எத்துணை வன்னெஞ்சாயினும் இச்செல்வம் ஏற்பட்ட பிறகு அந்நெஞ்சு மாறுதல் அடையக் காண்கிறோம். பொருந்தாத் திருமணங்கள்கூட இச்செல்வம் ஏற்பட்ட பிறகு மனம் பொருந்திய வாழ்வாதலைக் காண்கிறோம்.


இம்மை உலகத்து இசையொடும் பொருந்தி
மறுமை உலகமும் மறுஇன்று எய்துப
செறுநரும் விழையும் செயிர்திர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோர்,
                                                                  (அகம்-66)

என்று இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே ஒரு தமிழன் கூறினான் என்றால், இச்செல்வத்தின் பயனை இந்நாட்டார் நன்கு அறிந்திருந்தனர் என்பது கூற வேண்டுவதின்று.

இல்வாழ்வில் புகுந்த ஒருவன் சமுதாயத்திற்கு நன்கு பயன்பட வேண்டுமாயின், அவனுக்கு இச்செல்வம் மிகவும் இன்றியமையாதது என்பது கண்ட வள்ளுவப் பெருந்தகையார் ‘புதல்வரைப் பெறுதல்’ என்ற ஓர் அதிகாரமே வகுத்துச் சென்றார். அம்மட்டோடு இல்லை, வாழ்க்கைத் துணை நலம் சிறப்படைய இதுதான் இன்றியமையாதது என்றும் கூறினார். அவ்வதிகாரத்தின் இறுதிக் குறள்,

மங்கலம் என்ப மனைமாட்சி; மற்றதன்
நன்கலன் நன்மக்கட் பேறு.
                                                                  (குறள்–60)

என்று கூறுவதால், முன்னர்க் கூறப்பெற்ற கருத்துக்கள் வலியுறுதல் காணலாம்.