பக்கம்:அகமும் புறமும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் கண்ட அகவாழ்வு • 49

வழி வகுக்கிறார் ஆசிரியர். யாரை ஆராய வேண்டும் என்று நினைக்கிறோமோ, அவர்களுடைய பிள்ளைகளைக் கொண்டு அவர்களின் அகத் தூய்மையை ஆராயலாம். ‘அவர் மிகமிக நல்லவர்; ஆனால், பூர்வ சென்ம பாவம். பிள்ளைகள் மோசமாய் இருக்கின்றார்கள்!’ என்று சிலரைப் பற்றிச் சொல்லக் கேட்கிறோம். இக்கூற்று உண்மையா? ‘அன்று’ என மறுக்கிறார் ஆசிரியர். மனம் தூயவராக ஒருவர் இருப்பாரேயானால், நிச்சயமாக அவருடைய எச்சமும்–பிள்ளைகளும்–நன்றாக இருக்கும் என்று உறுதியாகக் கூறுகிறார். எவ்வளவு புற உலகத்தைத் தமது வெளி வேடத்தால் ஏமாற்றினாலும், மனத்தின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தும் தன்மை பிறக்கும் குழந்தைகளிடம் இருக்கின்றது. இதனை இன்னும் வலியுறுத்தவே தக்கார் தகவிலர் என்பதையறிய அவர்கள் எச்சமே சிறந்த கருவி, என்பது மீண்டும் குறிக்கப் பெறுகிறது.

இக்குறளுக்குப் பல்வேறு வகையாகப் பொருள் கூறப் பெறுகிறது. ஒப்பற்ற உரையாசிரியராகிய பரிமேலழகருங்கூட மாறுபட்டே பொருள் கொள்கிறார். ஆசிரியர் வள்ளுவரின் மனத்தத்துவ நுணுக்கம் அறியப்படாமையின், இப்பிழைபாடு நேரிட்டதோ என்றுகூட நினைக்க வேண்டியுளது. அன்றியும் பரிமேலழகரின் வடநாட்டு நாகரிகக் கொள்கையும் இவ்வாறு பொருள் கூறக் காரணமாய் இருந்திருக்கலாம். இக்காலத்தில் எச்சம் என்பதற்கு ‘எஞ்சி நிற்கும் புகழ்’ என்றுகூடப் பொருள் விரிக்கப்படுகிறது. எவ்வாற்றானும் தகுதி இல்லாதவர் புகழ் பெற்று வாழ்தலைக் கண்ட நாம், இருபதாம் நூற்றாண்டில் வாழ்கிற நாம், இவ்வாறு பொருள் கூறினால் அது பெருந்தவறாக அன்றோ முடியும்? இனி இக்கருத்தைச் சற்று விரிவாகக் காண்போம்.