பக்கம்:அகமும் புறமும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் கண்ட அகவாழ்வு • 51

சேகரிக்கும் வழியை ஆராய்ந்து கொண்டிருக்கலாமல்லவா? அல்லது வருமான வரியை ஏமாற்றப் பொய்க் கனக்கு எவ்வாறு புனைவது என்ற ஆழ்ந்த சிந்தனையில் செல்லலாமல்லவா? முன்னர்க் கூறிய இரண்டு செயல்களையுங் கொண்டு அவனை அன்பன் என்று கூறும் பிழை யாருடையது? இப்படிப்பட்ட அன்பர்கள் என்றும் இருந்திருப்பார்கள் போலும்! அல்லாவிடில்,


பொக்க மிக்கவர் பூவும்நீ ருங்கண்டு
நக்கு நிற்பன் அவர்தமை நாணியே

(திருமுறை 5:90:9)

என்று திருநாவுக்கரசர் பெருமான் கூறுவாரா? இத்தகைய ஒருவனுக்கும் பிள்ளை பிறந்து அவன் தவறான வழியில் சென்றால், அதில் வியப்பு என்ன இருக்கிறது? சில நாட்களுக்கு முன்னர் 'தேச பக்தர்' பலரைக் கண்டோம். அவர்களுடைய புறவாழ்க்கை ஒன்றை மட்டுங்கண்டு விட்டு மகாத்துமாவின் உண்மைச் சீடர்கள் என்று நாம் நினைத்தது உண்டு. ஆனால், சந்தருப்பம் வாய்த்தவுடன் இந்த உண்மைச் சீடர்கள் அரிசியைப் பதுக்கவும், 'கள்ள மார்க்கெட்டு' வாணிபம் செய்யவும் சிறிதும் பின்வாங்கவில்லை. இத்தகைய கல் மனம் உடையார்க்கு எச்சம் (மக்கள்) எவ்வாறு நன்றாய் இருக்க முடியும்?

அகமனம்

பிறர் தம்மைக் காணுங்காலம் அனைத்தினும் போலியாகத் தூயவர் போல நடிக்கும் இவர்கள் மனம் உண்மையில் கருங்கல் தளமிட்டு மூடப்பட்ட சாக்கடையேயாகும். குழந்தை தரிக்கின்ற காலத்தில் இச் சாக்கடை திறக்கப்படுகிறது. கருத்தரிக்கும் காலத்தில் தாய் தந்தையர் என்ற இருவருடைய மனமும் எந்நிலையில் ஈடுபட்டிருக்கிறதோ, அதே பண்பு அமைந்துதான் குழந்தைகள் தோன்றும். இற்றை நாள் மனவியல் நூலார் கூறுவது ஒரு