பக்கம்:அகமும் புறமும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரிவாகிய ‘இலக்கியத்தில் வாழ்வு’ என்னும் பகுதியில்.

அடுத்து அமைவது புறம் ஆகும்.

ஒரு நாட்டு மக்களின் சமுதாய வரலாற்றை அறியப் பல கருவிகள் உண்டு. ஒரு காலத்தில் ஒரு சமுதாயத்தில் தோன்றிய கவிதைகளைக் கொண்டு அக்காலத்து வரலாற்றை அறிய முயல்வது ஒரு முறை. ‘இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த நம் முன்னோர்கள் என்ன நினைத்தார்கள்? எவற்றைத் தம் குறிக்கோள்கள் எனக் கருதினார்கள்?’ என்பவற்றை அறிதலும் ஒரு வகைச் சமுதாய வரலாறேயாம்.

அன்றைய சூழ்நிலையில் தமிழ் மன்னன் ஏறத்தாழத் தெய்வமாகவே கருதப் பெற்றான். எனவே, அவனைப் பற்றிச் சற்று விரிவாகக் காண்பதன் மூலம் தமிழருடைய எண்ண ஓட்டங்களை அறிய முடிகிறது. ‘தமிழர் கண்ட அரசன்’ என்ற பகுதி சற்று விரிவாகப் பேசப்படுகிறது. ‘அன்றைய தமிழன் எவற்றை உண்டான்? எவ்வாறு உடுத்தான்?’ என்பவற்றை அறிவதும் பயனுடைய செயலாம். எனினும், ‘எவற்றை அவன் உயிரினும் மேம்பட்ட குறிக்கோள்களாகக் கொண்டான்?’ என்று அறிவது மிகுதியும் பயனுடைய செயலாகும். எனவே, இப்பகுதி இறுதி அதிகாரமாகப் பேசப்படுகிறது. இத்தகைய உயர்ந்த புறவாழ்வை மேற்கொண்டிருந்தனர் தமிழர் என்று அறிகிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அகமும்_புறமும்.pdf/6&oldid=1347533" இலிருந்து மீள்விக்கப்பட்டது