பக்கம்:அகமும் புறமும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52 • அகமும் புறமும்

புறம் இருக்க, பழந்தமிழனும் இதை நன்கு அறிந்திருந்தான் என்பதை உதாரண முகத்தாலும் அறியலாம்.

உதாரணம்

ஏழாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் ஒரு புரட்சி தேவையாய் இருந்தது. அப் புரட்சியை நடத்தி வைக்க ஒருவர் தேவைப்பட்டார். தேவையைத் தமிழ் நாட்டார் பலரும் உணர்ந்தனர். ஆனால், இருவர் மட்டுந்தான் அத்தகைய புரட்சியாளர் தம்மிடம் தோன்றவேண்டும் என்று ஒருதலையாக நினைத்தனர். ஒருவர், பாண்டிமா தேவியாரான 'மங்கையர்க்கரசியார்', இரண்டாமவர், சோழ நாட்டில் சீர்காழியில் வாழ்ந்த 'சிவபாத இருதயர்' என்ற பெரியார். ஆனால், முதலாமவராய் உள்ள அரசியாருக்கு இந்நினைவு பயன்பட வழியில்லை. ஏன்? அவர் இல்வாழ்க்கை பயனற்றதாகிவிட்டது. மேலும், அவர் மட்டும் இந்நினைவு கொண்டிருக்க, அவருடைய கணவன் வேறு நினைவில் இருந்தான். இரண்டு மாறுபட்ட கருத்துடைய அவர்கட்கு இத்தகைய குழந்தை பிறத்தல், இயலாத தொன்று. எனவே, சீர்காழிக் குடும்பத்தார் எண்ணம் பூர்த்தியாகிறது. ஊராரைப்போல ஒரு சாதாரணக் குழந்தை வேண்டும் என்று மட்டும் அத்தாய் தந்தையர் நினைக்கவில்லை. தமிழ் நாட்டைச் சீர்படுத்த ஒரு புரட்சியாளர் தங்கட்கு மகனாகப் பிறக்கவேண்டும் என்றே அவர்கள் அல்லும் பகலும் நினைந்தார்கள். அவர்கள் நினைவையும் வாழ்க்கையையும் இதோ கவிஞர் சேக்கிழார் படம் பிடித்துக் காட்டுகிறார்.

மனையறத்தில் இன்பமுறும் மகப்பெறுவான் விரும்புவார்
அனையநிலை தலைநின்றே ஆடியசே வடிக்கமலம்
நினைவுறமுன் பரசமயம் நிராகாரித்து நீறாக்கும்
புனைமணிப்பூண் காதலனைப் பெறப்போற்றும் தவம்புரிந்தார்.

(பெ.பு–1922)