பக்கம்:அகமும் புறமும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56 • அகமும் புறமும்

மட்டும் இக்குறள் அமையவில்லை. மனித வாழ்க்கையில் அனைத்தையும் பெறுவதற்கோ, அன்றி இழப்பதற்கோ காரணமாக இருப்பது மனை வாழ்க்கைதான். மனையாள் நற்பண்புடையவளாயின், வாழ்க்கை பயன் பெறலாம்; அன்றேல், அனைத்தும் இழந்ததாகவே கருதப்படும். இது கருதியே ‘மங்கலம் என்ப மனைமாட்சி’ என்றார். இனி இவ் இல்வாழ்க்கையின் பயன் மக்கட்பேறு என்றார். அதுவும் நன்மக்கள் பெற்றால் ஒழியப் பயனாகக் கருதப்படுவதில்ல. தம் குலம் விளங்கவோ, அன்றிப் ‘புத்து’ நரகில் வீழாமல் பெற்றோரைக் காக்கவோ ‘புதல்வர்ப் பேறு’ வேண்டும் எனப் பலரும் நினையலாயினர். ஆனால், வள்ளுவர் அவ்வாறு நினைத்தாரல்லர். முன்னவர் கருத்துப்படி பிறக்கும் குழந்தை எப்படி இருப்பினும் சரியே. ‘பேதையாய் இருப்பினும் பிள்ளை பிள்ளைதானே? பேருக்கு ஒரு பிள்ளை என்று இருந்து விட்டாலும் சரி,’ என்பார் கருத்து வள்ளுவர்க்கு உடன்பாடு அன்று போலும்! அதனாலேயே மக்கள் என்று குறிப்பிடும் இடங்கள் அனைத்திலும் பெரும்பாலும் அடைமொழி கொடுத்தே கூறுகிறார். ‘நன்கலம் நன்மக்கட் பேறு’ ‘அறிவு அறிந்த மக்கட்பேறு’ என்பன போன்ற இடங்கள் இக்கருத்தை வலியுறுத்தகின்றன.

பண்புடை மக்கள்

புதல்வரைப் பெறுதல் என்ற அதிகாரத்தின் முதலிரண்டு குறள்களும் மக்கள் என்ற பொதுச் சொல்லையே ஆள்கின்றன. எனவே ஆண் பெண் என்ற வேறுபாடு இன்றியே ஆசிரியர் பாடுகிறார் என்பது நன்கு தெரியப்படும். இந்த இரண்டு பாடல்களும் சிறந்த உட்கோளோடு திகழ்கின்றன.


‘பெறும்அவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவுஅறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.’
                                                                        (குறள்–61)