பக்கம்:அகமும் புறமும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60 • அகமும் புறமும்

தலைவன் தலைவி மக்கள் சுற்றத்தார் என்பவருள் அடங்கி விடுதலின், அதில் சமுதாயம் பற்றிய வினாவிற்குத் தேவை இல்லை. ஆனால், எத்தகைய மனிதனும் வீட்டினுள்ளேயே தங்கித் தன் காலத்தைக் கடத்திவிட முடியாது. வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் தன்னை ஒத்த மனிதர்களிடம் கூடிப் பழக வேண்டி உளது. அங்ஙனம் பழகுங்கால் தன் இயற்கையோடு ஒத்தவர்களுடன் நட்புக் கொள்ளவும், மாறுபட்டவர்களுடன் மாறு கொள்ளவும் தொடங்குகிறான். இந்நிலை மாறிப் பிறர் இயற்கை தன்னியற்கையுடன் ஒத்ததாக அமையாதவிடத்துங்கூட அவர்களுடன் சேர்ந்து வாழ முனைகிறான். இம்முயற்சியால் சகிப்புத் தன்மை பிறக்கிறது. தன்னினும் வேறுபட்ட கருத்துடையாருங்கூட இப்பரந்த உலகில் வாழ உரிமை பெற்றவர்களே என்று முழுவதும் உணரும் நிலையிலே தான் ஒரு மனிதன் பண்பாடு பெற்றவன் ஆகிறான். இத்தகைய பண்பாடு இல்லை எனில், வாழ்க்கை வறண்ட பாலைவனம் ஆகிவிடும். ‘மனிதன் சமுதாயப்பிராணி’ (Man is a social animal) என்ற பழமொழி உண்மையாவது இந்நிலையிலேதான். உலகிடைப் பிறந்ததன் பயன் இரு வகைப்படும். ஒன்று, ஆன்ம முன்னேற்றம். அது பிறர் உதவி இன்றித் தன் முயற்சியாலேயே நடைபெறுவது. இரண்டாவது, சமுதாயத்தில் உள்ள தன் போன்ற பிறர் நலமடையத் தன் வாழ்க்கையைச் செலுத்துவதாகும். இவ்விரு வகைப் பயனையும் அடைய வள்ளுவர் நூல் வகுக்கிறார். ஏனையோர் நூலினும் குறள் சிறப்படைவது இத்துறையிலேயே ஆம். இவ்விரு பயனையும் அடைய இருவேறு வழி வகுக்காமல், ஒன்றன் மூலமே மற்றொன்றை அடையக் குறள் அடி கோலுகின்றது; இரண்டாவது பயனை அடையச் செய்யும் முயற்சியிலேயே முதற்பயனையும் அடைய வழி செய்கிறது.