பக்கம்:அகமும் புறமும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70 • அகமும் புறமும்

அடைவது இசையில் இயலுமாயினும், அவ்வொன்றலின் பயனாக அன்பு பிறப்பதில்லை. ஒன்றல் தன்மை நாளாவட்டத்தில் தன்னலம் என்ற இயல்பை மறக்க உதவும் என்பது உண்மையே. கலைஞன் 'தான்’ என்ற அகங்காரத்தை மறந்து உயர்நிலை அடைவது இவ் ஒன்றல் தன்மையாலேயே ஆகும்,

இசை ஈடுபாடு போதாது

ஆனால், சமுதாயத்தில் ஓர் உறுப்பாய் இருந்து பிறருக்கும் தனக்கும் பயன்படும்படி வாழ்வை நடத்த வேண்டிய கடப்பாடு உடைய ஒருவன், இத்தகைய ஒன்றல் தன்மை மட்டும் பெற்றிருந்து பயன் இல்லை. அவனுடைய தனிப்பட்ட முன்னேற்றத்திற்கு அது பயன்படுமாயினும், பிறருக்கு அவன் பயன்படமாட்டான். இசையில் ஈடுபட்டுத் தன்னை மறக்கும் இயல்பால் சமுதாயத்திற்கு ஒருவன் என்ன பயனை விளைக்க முடியும்? எனவே, சமுதாயத்தில் வாழும் ஒருவன் மனம், வேறு வகையில் பழக்கப்படுத்தப்பட வேண்டும். அவன் வாழ்க்கை நன்கு நடைபெற ஒரே வழிதான் உண்டு. அதாவது அவன் அன்பு நிறைந்த மனத்தைப் பெறல் வேண்டும். அன்பைப் பெற வழி யாது? குழந்தைகளிடந்தான் மனிதனுடைய அன்பு நன்கு வளர்கிறது. குழந்தைகளிடத்தில் பழகுவதில் தனிப்பட்ட ஓர் இன்பத்தையும் அவர்கள் மழலையைக் கேட்பதில் ஒரு தனி மகிழ்ச்சியையும் எவன் பெற முடிகிறதோ, அவனே முழுத்தன்மை பெற்ற மனிதனாகிறான். மனிதன் முழுத்தன்மை பெற இது ஒரு வழி என்பதைப் பழங்காலத் தமிழன் நன்கு கண்டிருந்தான். இதனாலேயே இலக்கியத்திலும் குழந்தை இடம் பெற்றது.பிற்காலத்தில் குழந்தையைப் போற்றப் பிள்ளைத் தமிழ், என்ற தனி இலக்கியமே தோன்றலாயிற்று.