பக்கம்:அகமும் புறமும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் கண்ட அகவாழ்வு • 71


இத்தகைய அரிய, குழந்தை இன்பத்தில் ஈடுபடுவது எளிது என்பதும் நோக்கற்பாலது. மனிதன் பொறிகளின் வழி இசையை அனுபவித்துத் தன்னினும் வேறுபட்ட அந்த இசையில் சென்று ஒன்றுவதைக் காட்டிலும் சுலபமானது குழந்தையினிடம் ஒன்றுவது. குழந்தை என்பது தந்தையின் ‘நகல்’ அல்லது ‘பிரதி’ தானே? தானே வேறு வடிவமாய் இருக்கிறது அக்குழந்தையிடம் ஒருவன் ஒன்றுவது எளிது அன்றோ? எனவே, குழந்தையிடம் உண்மையான அன்பு நிறைந்த ஒருவனுக்குக் குழலும் யாழும் ஓரளவு வெறுத்துவிடும் என்பது உண்மையன்றோ? இக்கருத்தை வலியுறுத்தும் அகநானூற்றுப் பாடல் ஒன்று நினைவு கூர்வதற்குரியது.

குழல் வெறுத்த தலைவன்

தலைவன் ஒருவன் பரத்தை வீட்டிற்குச் செல்லப் புறப்பட்டான். புதிய ஆடை அணிகளால் தன்னை அலங்காரம் செய்துகொண்டு தேர்மேல் ஏறி வருகின்ற அத்தலைவன், தன்னுடைய புதல்வன் வீதி வழியே தளர் நடையுடன் நடந்து வருவதைக் கண்டான்; தேர்ப்பாகனுக்குத் தேரை நிறுத்துமாறு உத்தரவிட்டான்; கீழே இறங்கிக் குழந்தையை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் வந்தான். குழந்தை அவனை விட மறுத்து, அழத் தொடங்கி விட்டது. தலைவன் வேறு வழியின்றித் தவித்தான். பரத்தை வீட்டில் அவன் வரவை எதிர்பார்த்து இசை முழக்கம் நடைபெறுகிறது. அவனை வா என அழைப்பது போல அந்த இசை அவனுடைய காதில் வந்து விழவும் குழந்தையினிடம் கொண்டுள்ள அன்பால் தலைவன் பரத்தை வீடு செல்லாமல் நின்றுவிட்டான். இக் கருத்தை அழகிய அகப்பாடல் குறிக்கிறது.


இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறுவின்று எய்துப