பக்கம்:அகமும் புறமும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் கண்ட அகவாழ்வு • 73

அன்புடைய ஒருவனுக்கு இசை வெறுத்து விடும் என்பதில் ஐயம் என்ன? ஆம்! குழல் இனிது, யாழ் இனிது என்பர்; யாரென்றால், ‘தம் மக்கள்’ மழலைச் சொல் கேளாதவர். ‘தம் மக்கள்’ என்று ஆசிரியர் கூறியது ஆராயத்தக்கது. மேலும் ‘அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்’ என்றும் கூறுகிறார் அன்றோ? பொதுவாகக் குழந்தைச் செல்வத்தில் ஈடுபட்டு இன்பம் அடையும் ஒரு நிலை எளிதன்று.

இல்வாழ்க்கையை அன்புப் பெருக்கத்திற்கு அடிப்படையாக வைக்கிறார் ஆசிரியர் என்பது முன்னமே கூறப்பெற்றது. அந்த அன்பு பெருக வேண்டின், அவன் குழந்தையிடந்தான் அவனுக்கு அன்பு பெருகமுடியும். இத்தகைய அன்பைத் தம் குழந்தையிடங்கூடப் பெறாது வாழும் சில ‘புண்ணியவான்களும்’ இவ்வுலகில் உண்டு. ஆனால், மனிதன் மனிதத்தன்மை அடையக் குழந்தை ஒரு நல்ல சாதனமாகும். ஒருவனுடைய அன்புவளர்ச்சி எந்நிலையில் உள்ளது என்பதை அறியத் தகுந்த அளவு கோலாகும் இது. என்றைக்கு ஒருவனுக்குத் தன் மக்களின் மழலை, இசையைவிட இனிமையுடையது ஆகின்றதோ, அன்று அவன் இல்வாழ்வின் பயனைப் பெற்றுவிட்டான் என்றே கூறிவிடலாம்.

அதிகார முறை வைப்பு

மனிதன் மனிதனாக வாழ வேண்டுமானால், ‘அன்பு’ என்ற ஒரு பண்பு அவனிடம் நிறைந்து இருத்தல் வேண்டும். இப்பண்பு ஒருவனிடம் காணப்பெறும் அளவை நோக்கித்தான் ஒருவனை ஆத்துமா என்றும் மகாத்துமா என்றும் பிரித்துக் கூறுகிறோம். வேண்டத்தக்க இப்பண்பை வளர்க்கும் வழி அறிந்துகொள்ள வேண்டாவா? அதற்கு உற்ற வழி இல்வாழ்வும் அதன் பயனாகிய குழந்தைப் பேறுமே என்று ஆசிரியர் வள்ளுவர்