பக்கம்:அகமும் புறமும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74 • அகமும் புறமும்

குறிக்கிறார். அன்புடைமை என்ற அதிகாரம் புதல்வரைப் பெறுதல் என்ற அதிகாரத்தின் பின்னர் அமைந்திருப்பது அறிந்து மகிழ்வதற்குரியது. இவ்வதிகார முறை வைப்பு வள்ளுவர் செய்ததுதானா என்ற உண்மை இன்று பலராலும் ஆராய்ச்சி செய்யப்படினும் இங்ஙனம் சில அதிகாரங்கள் அவர் வகுத்தவை என்பதற்கு ஐயமின்று.

இது வாழ்வா?

சிறு குழந்தை முதல் பெரியவர் வரை காணப்படும் இவ்வகன்ற உலகம் நன்கு வாழ்வதற்கு இன்றியமையாது வேண்டப்படும் ஒரு கருவியாகும் அன்பு என்பது. இஃது இல்லையாயின், வாழ்க்கை அல்லது குடும்பம் என்று ஒன்று நடைபெற முடியுமா என்பதை நினைந்து பார்க்க வேண்டும். தாய்க்குக் குழந்தையிடம் அன்பு இல்லையானால் குழந்தை வளர்வது எப்படி? தந்தைக்குக் குடும்பத்தில் அன்பு இல்லையானால், குடும்பம் நடைபெறுவது எங்ஙனம்? சுருங்கக் கூறின், உலகமும், அதில் மக்களும் வாழ முடியாது, அன்பு இல்லையாயின், இது கருதித்தான் ஆசிரியர்,

அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம்தளிர்த்து அற்று.

(குறள்-78)

என்று கூறினார்.வலிய பாறையில் விறகுக் கட்டை தளிர்க்க போவதுமில்லை; அன்பு இல்லாத குடும்பம் நன்கு வாழப் போவதுமில்லை.

போலி வாழ்வு

அன்பு என்னும் பண்பை ஒருவர் பெற்றிருக்கிறார் என்பதை எவ்வாறு அறிவது? இத்துணைச் சிறப்புப் பொருந்திய இப்பண்பை ஒவ்வொருவரும் பெற்றுள்ளது