பக்கம்:அகமும் புறமும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் கண்ட அகவாழ்வு • 75

போலவே நடித்தால் அதனை எவ்வாறு நம்புவது? உண்மை அன்புடையாரை அறிதற்கு அவர் வாய்மொழியைக் கருவியாகக் கொள்ளலாமா? கூடாது என்கிறார் ஆசிரியர். அன்பிலாருங்கூட, வாய்ச் சாமர்த்தியத்தால் அன்புடையார் போல நடிக்கவுங் கூடுமன்றோ? எனவே, அன்புடையாரை அறிய ஒரு வழி வகுக்கிறார் ஆசிரியர். அன்பு செய்யப்பட்டாரைக் கண்ட மாத்திரத்தே பொங்கி வழியும் கண்ணீரே அன்பை வெளிப்படுத்தும் சாதனமாகும். அன்புடையார் வாய் பேசாதுகூட இருக்கலாம். என்றாலும், அவர் கண்கள் உண்மையை உலகறியப் பறை சாற்றிவிடும். அன்புடைய ஒருவனுக்கும், அவன் கொண்டுள்ள அன்புக்கும் தொடர்பு எவ்வாறுளது? அன்பு என்ற பண்பை ஒருவன் எவ்வாறு பெறவது? பெற்று வளர்க்கக் கூடிய ஒன்றா அது? இருக்கலாம். ஆனால், பெற்றுவிட்ட பின் ஒருவனுடைய புறத்துணையாகிய வேட்டி, சட்டை போன்று வேண்டுமான பொழுது போடவும் கழற்றவும் கூடிய ஒன்று அன்று அது. மனிதன் உடம்பு எடுத்ததன் பயன் அன்பு செய்தலேயாம் என்று கூறுகிறார் ஆசிரியர்.

அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.

(குறள்-73)

என்ற குறளால் பெறுதற்கு அரிய ஓர் உண்மையைக் கூறுகிறார். கேவலம் இந்த உலகில் மட்டும் செம்மையாக ஒருவன் வாழ்ந்தாற் போதுமா? மறுமையிலும் அவன் சிறப்படைய ஒரு வழி உண்டானால், அதுவே அன்புடைமை ஆகும் என்கிறார். அன்புடையார் இம்மை மறுமை என்ற இரு பயன்களையும் பெறுவர். வீடுபேற்றை இப்பிறவியில் பெற்றுயர்ந்த பெரியார் அனைவரும் கையாண்ட சுருங்கிய வழி இஃது ஒன்றுதான். இயேசுநாதர், இராமகிருஷ்ணர் போன்ற ஜீவன் முத்தர்கள் வேறு

6