பக்கம்:அகமும் புறமும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76 • அகமும் புறமும்

என்ன அரிய காரியத்தைச் செய்தனர்? அன்புடைமை ஒன்றே அவர்கட்கு வீட்டை அளித்தது. திருத்தொண்டர் புராண வரலாறுகளை அறிந்தவர்கட்கு இவ்வுண்மை நன்கு விளங்கும். சிறுத்தொண்டர், இயற்பகையார், மெய்ப்பொருள் நாயனார் போன்ற அடியார்கள் செயற்கருஞ் செய்கை செய்தார்கள். ஆனால், ஆனாயர் போன்றார் எவ்விதச் செயற்கரிய செயலையுஞ் செய்யவில்லை. அன்புடைமை ஒன்றே அவர்கள் வாழ்வை ஈடேற்றியது. இத்தகையவர்கள் கொண்டிருந்த அன்பு எப்படிப்பட்டது?

அன்பே தாமாதல்

இவர்கள் கொண்டிருந்த அன்பு வேறு, இவர்கள் வேறு என்று பிரித்துக் காண்பது இயலாத காரியம். அன்பு எனும் பண்பைத் தாங்கினார்கள் இவர்கள் என்று கூறுவதற்கில்லை. இவர்களே அன்பின் வடிவம் என்றுதான் கூறவேண்டி உளது. கண்ணப்பரைப் பற்றிக் கூற வருகிறார் சேக்கிழார். தான் என்ற முனைப்பை அறவே களைந்துவிட்டு இறைவரைத் தம் தோழராகவே மதித்து, அவருக்காக வேட்டை ஆட வந்த அப்பெருந்தகையை என்னவென்று வழங்குவது?


அன்பு பிழம்பாய்த் திரிவார், அவர் பெருமை அளவிற்றோ

(பெ.பு–803)

என்று கூறுகிறார் கவிஞர். இறைவனைப் பற்றிக் கூறிய இடங்களில் எல்லாம்,


அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே!
அன்பெனும் குடில் புகும் அரசே!

(திருவருட்பா–1)

என்றெல்லாம் கூறினார் வள்ளலார் ஆனால், சாத்திரஞ் செய்த திருமூலர்,