பக்கம்:அகமும் புறமும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் கண்ட அகவாழ்வு • 79

னாலேயே நடைபெறுகின்றன. செயலளவில் இன்பம் பயப்பனவும், துன்பம் பயப்பனவும் எனச் செயல்கள் இருவகைப்படும். ஒரு தாய்க்கு இரண்டு குழந்தைகள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு குழந்தைக்கு வெப்பு நோயும், மற்றொன்றுக்கு வயிற்றுக் கடுப்பும் இருக்கின்றன. முதற் குழந்தைக்குக் கசப்பு மருந்தும் மற்றொன்றிற்கு இனிப்பு மருந்தும் தருகிறாள் தாய்; ' கசப்பு மருந்தை உட்கொள்ளாத குழந்தையைக் காலில் போட்டுப் பிடிவாதப்படுத்திப் புகட்டுகிறாள். அதனால், அக்குழந்தை தன் தாய்க்குத் தன்மாட்டு அன்பு இல்லை என்றும், தனக்குக் கசப்பு மருந்தே தருகிறாள் என்றும், அடுத்த குழந்தைக்கு அன்புடைமையின் இனிப்பு மருந்து தருகிறாள் என்று நினைத்துக் கொண்டால், இப்பிழை யாருடையது; கசப்பு மருந்தை ஊட்ட வேண்டித் தாய் குழந்தையின் துன்பத்தைப் பாராது காலில் போட்டு அமுக்கினது உண்மைதான். செயலளவில் இது அன்புச் செயலன்று; மறச் செயல்; கொடுமை உடைய செயல் என்றுதான் கூற வேண்டும். வழியே செல்கின்ற ஒருவனை மற்றொருவன் கத்தியால் குத்திவிடுகிறான் என்றால் அதற்குரிய தண்டனை என்ன என்பதை நம்மில் பலரும் அறிவோம். ஆனால், அறுவை வல்லுனரான ஒரு வைத்தியர் நோயாளி ஒருவரை அறுக்கிறார்; அதற்குப் பதிலாக ஆயிரக்கணக்கான ரூபாய்களையும், நோயாளியின் நன்றியறிதலையும் பரிசிலாகப் பெறுகிறார். ஏன்? செயலளவில் மருத்துவர் செய்வது மறச் செயல்தான். ‘ஐயோ! அம்மா!’ என்று நோயாளி கதறுவதையும் பொருட்படுத்தாமல் அவனுடலை அறுத்தல் மறச்செயல் தானே? ஆனால், செயலளவில் மறமாய் இருப்பினும் அவருடைய கருத்து நோயாளிக்கு நன்மை பயக்க வேண்டும் என்பதன்றோ? இது கருதித்தான் ஆசிரியர்,