பக்கம்:அகமும் புறமும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் கண்ட அகவாழ்வு • 83

அவன் கொஞ்சம் கொஞ்சமாகத் ‘தன்னலம்’ என்ற பேயினுடைய பிடியிலிருந்து விடுபடவேண்டும் என்பது முன்னமே கூறப்பட்டதன்றோ? அதற்குரிய வழி துறைகள் யாவை? அவ்வழி துறைகளில் ஒன்றுதான் விருந்து ஓம்பலாகும். விருந்தினரை வெற்று வாய்ச்சொல்லால் மட்டும் உபசரித்தல் போதுமா? அவர்கட்கு உணவு கொடுப்பது என்றால், அதனால் ஆகும் செலவு எவ்வளவு ஆகும்? ஒருவன் உடலை உழைத்துச் சம்பாதிக்கும் பொருளைச் செலவு செய்ய இதுதானா? ‘ஆம்’ என்கிறார் ஆசிரியர். அவருக்கும் முன்னரே நக்கீரர் என்ற பெரியார், ‘செல்வத்துப் பயனே ஈதல், துய்ப்பேம் எனினே தப்புத பலவே!’ என்று கூறியுள்ளார். ஒரு மனிதன் தானாகப் பாடுபட்டு உழைத்துப் பெற்ற பொருளை எளிதில் ஈந்துவிட விரும்ப மாட்டான். ஆனால், இந்தப் பற்று உள்ளமே அவனுக்குப் பெருந்தீங்காகப் பின்னர் விளையப்போகிறது. மனிதனைப் பற்றிய தன்னலப் பேய் ஒழிய, விருந்தோம்பல் முதற்படி ஆகும். அதிலும், வேளாண்மை செய்பவன் பிறருக்குச் சோறு கொடுத்தலை ஒரு பெரும்பாரமாகக் கருத மாட்டான். எனவே, விருந்தோம்பலின் மூலமே அவனுக்குப் பரந்த மனப்பான்மை வருமாறு செய்யலாம்.

புதிய காரணம்

விருந்தோம்பலை இவ்வளவு அழுத்தமாக வள்ளுவர் கூறுவதற்குப் பிறிது ஒரு காரணமும் இருக்கலாமோ என ஐயுற வேண்டி உளது. இன்றுங் கூடத் தமிழ்நாடு உணவு நிலைமையில் ‘சுயதேவை’ அளவுக்குக் குறைவாகவே உற்பத்தி செய்யக்கூடிய நிலையில் உள்ளது. இன்றைய நிலைமையே இவ்வாறு என்றால், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் இந்நிலை இன்னும் மோசமாகத்தானே இருந்திருக்கும்? இன்றுள்ள அளவுகூட அன்று விளை நிலங்கள் பயன்படுத்தப்பெற்றுப் பயன் தந்திருக்கமுடியாது.