பக்கம்:அகமும் புறமும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84 • அகமும் புறமும்

இன்று தமிழ்ச் சமுதாயம் பெருகியுள்ள அளவு தமிழ் மக்கள் கூட்டம் அன்று இல்லாமல் இருந்திருக்கலாம். எனவே, உணவு நெருக்கடியும் இவ்வளவு இல்லாமல் இருந்திருக்கலாமெனில். விளைநிலங்களும் குறைவாகவே இருந்திருத்தல் வேண்டும், மேலும், தமிழ் மக்கள் இடையே ஓயாத போர் ஏற்பட்டு வந்தமையின், அமைதியாக இருக்கும் காலத்தில் மட்டுமே அதிகமான வேளாண்மை நடைபெற முடியும். ஓயாது போர் என்றால், அதனால் ஏற்படும் பொருள் அழிவும் ஆள்சேதமும் எவ்வளவு என்று எண்ணிப் பார்க்கவும் மனம் நடுங்குகிறது! இந்நிலையில் உள்ள பயிர் நிலங்களைக்கூடச் செம்மையாகப் பயிர் செய்யப் போதிய ஆட்கள் இருக்கவியலாது அன்றோ? எனவே, உணவுப் பஞ்சமே நாட்டிலிருந்திருக்கும் என்பதில் ஐயமென்னை? இம்மட்டோடு இல்லை. உள்ள பயிர் நிலங்களும் இன்று போலப் பலரிடம் இருந்திருக்க இயலாது. உடையார் சிலரும் இல்லார் பலருமாகவே இருந்திருப்பர். ‘இலர் பலராகிய காரணம்’ என்ற குறளால் (270) இவ்வுண்மை அறியப்படுகிறதன்றோ? உடையாராகிய சிலரும் தம்பால் உள்ள பொருளைப் பிறர்க்குப் பகிர்ந்து தாராவிடின்,இல்லார் கதி என்ன ஆகும் என்பது கூற வேண்டுவதன்று. அதிலும் ஏனைய பொருள்களைத் தாராளமாக வழங்கி விட்டு உணவைத் தாராவிடினும் பயன் இல்லை. தரத்தக்கனவாய பொருள்களில் தலை சிறந்தது உணவே என்பது விளங்கும். ஆகவே, எல்லா வகை ஈகையினும் சிறந்தது உண்டி கொடுக்கும் ஈகையேயாகும். பழந்தமிழ்ப் பாடல்களை ஒரு முறை படிப்பவரும், ‘பாணர், கூத்தர்’ என்பவரை மறத்தல் இயலாது. இப்பாணர்கள் ஓயாது வறுமையில் உழலும் திருக்கூட்டத்தார். இவர் விரும்புவது நல்லுணவே ஆகும். அரசர்கள் தரும் பொன், வெள்ளி முதலிய பரிசில்களைக் காட்டிலும் அவர்கள் தரும் உணவையே பெரிதும் விரும்பி