பக்கம்:அகமும் புறமும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86 • அகமும் புறமும்


தலைவியின் கண்கள்

அகவாழ்வின் இன்றியமையாத உறுப்பாவாள் தலைவி. பின்னர்க் காணப்போகும் நற்றிணைப் பாடல்கள் அனைத்திலும் தலைவியின் அழகு முதலியன விரிவாகப் பேசப்படும்.ஆனால், குறள் அத்தலைவியின் அழகு பற்றிப் பேசுவதே ஓர் அலாதியான அழகு. இதோ தலைவியின் கண்களைப் பற்றிக் குறள் பேசுகிறது.

பெண்ணைப்பற்றிப் பாடாத தமிழ்ப் புலவரே இல்லை என்று கூறிவிடலாம். புலவரனைவரும் கலைஞர்; கலைஞரோ அழகில் ஈடுபடுபவர்; பெண்களோ, அழகின் இருப்பிடம்; எனவே, பெண்களைக் கவிஞர்கள் பாடுவதில் வியப்பொன்றுமில்லை.

பெண் அழகில் ஈடுபடுவதும் அவ்வழகு பற்றிக்கவிதை புனைவதும் கவிஞர் அனைவருக்கும் பொதுவெனில், சிறந்த கவிஞரைக் காண்பது எவ்வாறு? அனைத்துக் கவிஞரும் இவ்வொரு பொருளைப் பற்றிப் பாடினாலும் அவரவர் தம் அனுபவத்தின் விரிவு, ஆழம், கற்பனை என்பவற்றிற்கேற்ப அவர்கள் கவிதைகளும் மாறுபடும். அழகில் ஈடுபடும் இயல்பு பொதுவாயினும், அவ்வழகை எங்கே, எவ்வாறு காண்பது என்பதில் வேறுபாடுகள் தோன்றக் கூடும் அழகைப் புறத்தே காண்பவர்களும் அகத்தே காண்பவர்களும் உண்டு.

பொருளில் அழகு எங்கே உறைகிறது என்பது பற்றித் தத்துவப் பேராசிரியர்கள் இன்னும் முடிந்த முடிபாக ஒன்றுங் கூறவில்லை. பொருளிலேயே அழகு இருக்கிறது எனில், அப்பொருளைப்பார்ப்பவர் அனைவர்க்கும் அவ்வழகு காட்சி நல்க வேண்டும். உலகானுபவத்துடன் காணும்பொழுது இவ்வாறு இல்லை என்பது நன்கு விளங்கும். ஒருவர் அழகுடைய பொருள் என்று கூறுவதை