பக்கம்:அகமும் புறமும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88 • அகமும் புறமும்

என்றுதான் கூறல்வேண்டும். இவ்வாறு வியப்படைய அத்தலைவன் அவளிடம் யாது கண்டான்?

நிறைந்த அழகைக் கண்டிருக்கலாம். ஆனால், அவளுடைய அழகைப் பிறரும் கண்டிருப்பாரல்லரோ? அவர்கள் ஏன் அவளிடம் ஈடுபடவில்லை ? எனவே, ‘அவளுடைய அழகு மட்டும் அவனுடைய ஈடுபாட்டுக்குக் காரணமாகாமல்,அவனுடைய மனநிலையும் ஒரு துணைக் காரணமாயிருத்தல் கண்கூடு.’

அவளுடைய அழகின் எப்பகுதியில் ஈடுபடக் கூடிய மனநிலை தலைவனுக்கிருந்தது? தூரத்தே தலைவியைக் கண்டான்; ‘இவள் மானிடப் பெண்ணோ, அன்றித் தேவமகளோ!’ என்று ஐயுற்றான்; பின்னர் அவள் நடை பயில்வதைக் கண்டவுடன் மயிலோ என்று ஐயுற்றான்; இன்னுஞ் சற்று நெருங்கிச் சென்று காண்கையில் அவளுடைய கனமான காதணிகள், அவள் தன் இனத்தைச் சேர்ந்தவளே என்று முடிவு செய்யச் செய்தன. இதுவரை அவனுடைய கட்புலன் வேலை செய்ய, அதன் பின் சென்ற மனத்திரையில் ஓடும் எண்ணங்களைக் கூறுகிறார் வள்ளுவப் பெருந்தகை தம்முடைய, காமத்துப் பாலின் முதற்குறளில்:


அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

மாதர்கொல் மாலும்என் நெஞ்சு
(குறள்-1081)

தலைவியின் பொது அழகையும், நடை அழகையும் கண்ட தலைவன், அடுத்துக் கண்டது தலைவியின் கண்களையேயாம். காமத்துப்பாலின் - இரண்டாவது குறளிற் காட்சி தரும் தலைவியின் கண்கள் அப்பால் முழுதும் விரவிக் காட்சி தருவதுடன் குறிப்பறிதல் என்ற அதிகாரம் முழுவதையும் பெற்று விளங்குகிறது. காமத்துப்-