பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை




ஒடுகளப்போட்டிகளின் விதிமுறைகள் என்னும் இந்நூலை உங்களிடம் வழங்குவதில், ஒப்பற்ற மகிழ்ச்சியடைகிறேன். பெருமையும் பெறுகிறேன்.

நீண்டநாள் ஆசை ஒன்று, இன்று நிறைவேறுகிறது. உடற்கல்வி, விளையாட்டுத்துறை இலக்கியத்தை வளர்த்திட வேண்டும் என்பதற்காக, என் வாழ்நாளில் பெரும்பகுதி நேரத்தை ஒதுக்கிக்கொண்டு எழுதி, எழுதி பதிப்பித்து, நூலாக்கி வெளிக்கொண்டு வந்திருக்கிறேன். அத்துடன் என் வேலையும் கடமையும் நின்று விடவில்லை.

வெளிவந்த நூல்களை எல்லாம் விற்றுத் தீர்க்க வேண்டும் என்ற ஒர் அவசியம், கட்டாயம், நிர்ப்பந்தம், அதையும் ஆவலுடன் ஏற்றுக்கொண்டேன்.

பொங்குமா கடலாக புறப்பட்டு வந்த அனுபவங்கள். புயலாகி வீழ்த்திய துயரங்கள். 'போதுமப்பா வேதனைகள்' என்று புறம் போக்கி புலம்பவைத்த சூழ்நிலைகள் எல்லாம் என்னைக் கீழே அழுத்துவதற்குப் பதிலாக, மேலும் மேலும் என்னை உயர்த்தின. தொடர்ந்து பணியாற்றும் துணிவையும் வலிமையையும் அளித்தன.

மனதிலே வேதனைகள் மலையாக ஏறி என்னை அழுத்தி மறைத்த காலங்களில், அவைகளின் மேல் ஏறி அமர்ந்து கொண்டு, எண்ணங்களை என் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, கற்பனைகளின் கவர்ச்சியிலே களிப்படைந்து, வெற்றியாளனாக வீற்றிருந்த நேரங்களை எல்லாம் இப்பொழுது இன்பமாக நினைத்துப் பார்க்கிறேன்.