உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பத்திரிகையின் பதிப்பாளரும் நிர்வாகியுமான எம். பி. திருமலாச்சார்யா (மண்டயம் பிரதிவாதி பயங்கர திருமலாச்சார்யா) என்ற இளைஞரும் ஒருவர். எம். பி. டி. ஆச்சார்யா என்று பின்னர் குறிப்பிடப்பெற்ற இந்த இளைஞர் பாண்டிச்சேரியிலிருந்து விரைவிலேயே ஐரோப்பா சென்று அங்கிருந்த இந்தியப் புரட்சியாளர்களோடு சேர்ந்து கொண்டார். எம். பி. டி.ஆச்சார்யா 1919 மே மாதத்தில் லெனினைச் சந்தித்துப் பேசிய இந்தியப் புரட்சிவாதிகளில் ஒருவராகவும், வெளிநாடுகளில் இருந்து வந்த இந்தியப் புரட்சிவாதிகள் 1920 அக்டோபரில் தாஷ்கண்டு நகரில் தோற்றுவித்த இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சிக்குத் தலைவராகவும் இருந்தார் என்றால் அதில் வியப்பேதும் இல்லை.

பாரதி கிட்டத்தட்ட பத்தாண்டுக் காலம் பாண்டிச்சேரி யில் அரசியல் அஞ்ஞாதவாசம் புரிய நேர்ந்தது. எனினும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் இரும்புக்கரம் அவரது இந்தியா பத்திரிகையின் மீது விரைவிலேயே பாய்ந்தது. இந்தியா தமிழ் நாட்டுக்குள் வருவது தடை செய்யப்பட்டது. எனினும் பாரதி அதைக்கண்டு சளைக்காமல், தமது கருத்துக்களைப் பிற பத்திரிகைகளின் மூலம் வெளியிட்டே வந்தார்.

பிப்ரவரிப் புரட்சியின்போது

சர்வதேச நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனித்து வந்த பாரதி, ரஷ்யாவில் நிகழ்ந்து வந்த சம்பவங்களையும் தொடர்ந்து கவனித்து வந்தார். எனவே ரஷ்யாவில் 1917ம் ஆண்டின் பிப்ரவரிப் புரட்சி வெற்றி பெற்றபின், விரைவிலேயே 28.3.1917 அன்று தாம் எழுதிய "பொழுது போக்கு" என்ற உரையாடற் கட்டுரையில், "பூமியில் நல்ல யுகம் தோன்றப் போகிறது. மனித ஜாதி முழுமைக்கும் விடுதலையுண்டாகப் போகிறது. ருஷ்ய ராஜ்யப் புரட்சியானது இனி வரப்போகிற நற்காலத்தின் முன்னடையாளங்களில் ஒன்று" என்று எழுதினார் பாரதி, (பாரதி தமிழ்-பெ.தூரன் தொகுப்பு). ஏறத்தாழ இதே சமயத்தில்

9