"வரப்போகும் யுகம்"' (The Coming Age) என்ற தலைப்பில் தாம் எழுதிய ஆங்கிலக் கட்டுரையில், பாரதி பின்வருமாறு எழுதியுள்ளார்:
"சோஷலிசம் என்று மேலை நாட்டினர் குறிப்பிடுவது என்னவென்று இங்கு தெளிவாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. என்றாலும் மேலை நாட்டுக்கும் சரி, கீழை நாட்டுக்கும் சரி, கௌரவமான வாழ்க்கை நடத்துவதற்கு ஒரே ஒரு மார்க்கம்தான் உள்ளது. உலகைப் பொதுவுடமையாக்கி, அதில் சக- தொழிலாளிகளாகவும் கூட்டுப் பங்காளிகளாகவும் வாழ்வதே அந்த மார்க்கமாகும். கிருதயுகத்தில் மனிதர்கள் இம்மாதிரியே இந்த நாட்டில் வாழ்ந்தனர் என்று கூறும் மரபு நமக்குண்டு. அது உண்மையாகவும் இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். ஆயினும், எல்லா நாடுகளிலும், அதுவும் விரைவிலேயே, கிருதயுகத்தைக் கொண்டு வருவதில், மானிட வைராக்கியம் இனியும் வெற்றி பெறும், மனிதனின் மிகவுயர்ந்த வைராக்கியம் இதுவரையில் ஏதோ காரணத்தினால் முடக்கப் பட்டிருந்தது; அது தனது சக்தியின் தலையாய அம்சத்தை , நமது சமுதாயப் புன்மைகள் அனைத்தின் வேரையும் களையும் பணியில் செலுத்த முடியாமல் இருந்தது. மனித சமுதாயத் தின் உருவாக்கத்திலேயே நீதியை வெற்றி பெறச் செய்தாக வேண்டும். பின் நீதி எல்லா மானிட விவகாரங்களிலும் உறவுகளிலும் இயல்பாகவே வெற்றி பெற்றுவிடும். மனிதக் கூட்டுறவுகளின் கட்டுக்கோப்பில், போட்டிக் கோட்பாடு கொடிகட்டிப் பறக்கிற வரையிலும், நிலமும் நீரும் மனிதர்கள் எல்லோருக்கும் பொதுவான சொத்தாக இல்லாத வரையிலும், எந்த விதத்திலும் மனிதர்கள் தமது ’பொருளாதார’ உறவுகளில் மிருகங்களை விடவும் மோசமாகவே நடந்து கொள்வர். இந்த உண்மையைப் பெரும்பான்மையான மனிதர்கள் பூரணமாக உணரும் போது, நாம் நமது ஏறுமுகமான பரிணாமத்தில் அடுத்த அடியை எடுத்து வைத்து விடுவோம் (Bharathi's ”Essays and other Prose Fragments”).
10