பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியாவில் பிரசுரமானதாகத் தெரியவில்லை. அது பிரெஞ்சு இந்தியாவில், பாண்டிச்சேரியில் தான் வெளிவந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. முதல் உலக யுத்த காலத்தின் போது பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இங்கு விதித்திருந்த கடுமையான தணிக்கை விதிகளும், பிரிட்டிஷ் இந்தியாவில் இப்போது அமலிலிருந்து வந்த பத்திரிகைச் சட்டமும் தான் இதற்கான காரணங்களாகும். என்றாலும் பாரதி அக்டோபர் புரட்சிகளின் செய்தியையும், அதன் தலைவரான லெனினது சாதனையையும், உருவகக் கவிதை வடிவத்தைப் பயன்படுத்தி, மறைமுகமான முறையில், பிரிட்டிஷ் இந்தியாவைச் சேர்ந்த வாசகர்களுக்குத் தெரிவிக்கவே செய்தார். பாரதி தமது கவிதைகள் எதிலுமே லெனினைப் பெயர் சொல்லி நேர்முக வாகக் குறிப்பிடவில்லை என்பது உண்மையே. எனினும், காலைப் பொழுது' என்ற தலைப்பில் அவர் பாடியுள்ள தனிப் பாடல், லெனினையும், அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் ரஷ்யாவில் உதயமான புதிய சமுதாயத்தையும் தான் குறிப்பிடுகிறது என்பது இப்போது உறுதியாகியுள்ளது.

அப்போது காக்கை, "அருமையுள்ள தோழர்களே!
செப்புவேன் கேளீர், சில நாளாக் காக்கையுள்ளே
நேர்ந்த புதுமைகளை நீர்கேட்டறியீரோ?
சார்ந்துநின்ற கூட்டமங்கு சாலையின் மேற் கண்டீரே!
மற்றந்தக் கூட்டத்து மன்னவனைக் காணீரே!
கற்றறிந்த ஞானி கடவுளையே நேராவான்;
ஏழு நாள் முன்னே இறைமகுடம் தான்புனைந்தான்;
வாழியவன் எங்கள் வருத்தமெலாம் போக்கிவிட்டான்.
சோற்றுக்குப் பஞ்சமில்லை; போரில்லை; துன்பமில்லை;
போற்றற் குரியான் புது மன்னன், காணீரோ?"

என்றும், பிறவாறும் இந்தப்பாடலில் பாரதி பாடியுள்ளவை. அக்டோபர் புரட்சியையும், அதன் தலைவரான லெனினை யுமே குறிக்கிறது என்ற புதிய உண்மையைப் பேராசிரியர் தா. செல்லப்பா அண்மையில் கண்டறிந்து கூறியிருக்கிறார், (தாமரை, டிசம் 16). பாரதி குறிப்பிட்டுள்ள "புதுமை" அக்டோபர் புரட்சிதான் என்பதும், "கற்றறிந்த ஞானி"

12