பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்பவர் லெனினேதான் என்பதும் அவரது கருத்து. உண்மையில் பாரதியின் வசனப் பகுதியில் காணப்படும் 'காக்காய்ப் பார்லிமெண்ட்' என்ற உருவகக் கட்டுரையும் இதே பாணியில் இருப்பதும், அதிலும் ரஷ்ய நாட்டின் அரசியல் நிலைமை பற்றிக் காக்கைகள் பேசிக்கொள்வதாகப் பாரதி எழுதியிருப்பதும், பேராசிரியர் செல்லப்பாவின் கருத்தை ஊர்ஜிதம் செய்ய நமக்கு உதவும் துணைச்சான்றாக விளங்குகிறது. இது உண்மையானால், பாரதி அக்டோபர் புரட்சி வெற்றி பெற்ற தருணத்திலேயே, அதாவது ஒரு வார காலத்திலேயே ("ஏழு நாள் முன்னே") லெனினைக் குறித்தும் மறைமுகமாகப் பாடியுள்ளார் என்றே கொள்ளலாம்.

லெனின் பற்றிய நேர்முகக் குறிப்புகள்

என்றாலும், அந்நாட்களில் பாரதி சுதேசமித்திரன் தினசரியில் எழுதிவந்த பல செய்தி விமர்சனக் கட்டுரைகளில் அக்டோபர் புரட்சியின் சாதனைகளையும் லெனினது சாதனை களையும் குறித்து நேர்முகமாகவே விதந்தோதி எழுதியுள்ளார். உதாரணமாக, அக்டோபர் புரட்சி வெற்றி பெற்ற சில நாட்களில், 29-11-1917 அன்றே தாம் எழுதிய செல்வம் என்ற கட்டுரையை, பாரதி இவ்வாறு தொடங்குகிறார்: “ருஷ்யாவில் சோஷலிஸ்ட் கட்சியார் ஏற்க்குறைய தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றி விடக் கூடுமென்று தோன்றுகிறது”. இதன் பின் சோஷலிசம் என்றால் என்ன என்பதை அவர் விளக்கிவிட்டு, ரஷ்யாவைப் பற்றித் திரும்பவும் குறிப்பிடும் போது, "இக்கொள்கை மேன்மேலும் பலமடைந்து வருகிறது. ஏற்கெனவே ருஷ்யாவில் ஸ்ரீமான் லெனின்... முதலியவர்களின் அதிகாரத்தின்கீழ் ஏற்பட்டிருக்கும் குடியரசில் தேசத்து விளை நிலமும் பிற செல்வங்களும் தேசத்தில் பிறந்த அத்தனை ஜனங்களுக்கும் பொது உடைமையாகி விட்டது... ருஷ்யாவிலிருந்து இது (இக்கொள்கை) ஆசியாவிலும் தாண்டி விட்டது" என்று எழுதுகிறார். மேலும், "இந்த ஸித்தாந்தம் பரிபூரண ஜெயமடைந்து மனிதருக்குள்ளே ஸகஜ தர்மமாக ஏற்பட்ட பிறகு

13