பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கின்றன. உதாரணமாக, “நவீன ருஷ்யாவில் விவாக விதிகள்” என்ற கட்டுரையில் அவர் இவ்வாறு எழுதினார்: “போல்ஷிவிக் ஆட்சி ஏற்பட்ட காலத்திலே அதற்குப் பல வகைகளிலும் தோஷங்கள் கற்பிப்பதையே தம் உடைமையாகக் கருதிய சிலர், ............ போல்ஷ்விஸ்ட் கட்சியார் ஸ்திரீகளையும் பொதுவாகக் கொண்டு ஒருத்தியைப் பலர் அனுபவிக்கிறார்களென்று அபாண்டமான பழியைச் சுமத்தினர். ஆனால் கெட்டிக்காரன் புளுகு எட்டு நாநாளைக்கு! ஒன்பதாம் நாள் உண்மை எப்படியேனும் வெளிப்பட்டு விடும். ஒரு பெரிய ராஜ்யத்தைப் பற்றிய எத்தனை காலம் பொய்யைப் பரப்பிக் கொண்டிருக்க முடியும்?” (பாரதி-கட்டுரைகள்).

பாரதி பாடல்களில் அக்டோபர் புரட்சியின் செல்வாக்கு

அக்டோபர் புரட்சியின் செல்வாக்கும் அதன் கருத்துக்களும் பாரதி இதன்பின் எழுதிய சில பாடல்களில் பிரதிபலித்துள்ளன. உதாரணமாக, "முரசு" என்ற தலைப்பில், அக்டோபர் புரட்சி வெற்றிபெற்ற தருணத்தில், 1917 நவம்பரில் எழுதிய பாட்டில் (இது முதன் முதலாக, பரலி சு. நெல்லையப்பரால் பிங்கள ஆண்டில் ஐப்பசி மாதத்தில் தனி நூலாகப் பிரசுரம் ஆகியுள்ளது), பாரதி இவ்வாறு பாடுகிறார்:

வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர் - இங்கு
வாழும் மனிதரெல் லோர்க்கும்;
பயிற்றி உழுதுண்டு வாழ்வீர் - பிறர்
பங்கைத் திருடுதல் வேண்டாம்

அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்;
சிறியரை மேம்படச் செய்தால் - பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்.

15