உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

செய்து வந்த தவறான பிரசாரத்துக்குப் பதில் அளிக்கும் விதத்தில் சுதேசமித்திரன் தனது 13.12.1979 தேதியிட்ட இதழில், அக்டோபர் புரட்சியை நேரில் கண்ணாரக் கண்டவரும், “உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்” என்ற தலைப்பில் அந்தப் புரட்சியைப் பற்றிய அற்புதமான நூலை எழுதியவருமான பிரபல அமெரிக்கப் பத்திரிகையாளர் ஜான் ரீட், 12. 10. 1818 தேதியிட்ட அமெரிக்க லிபரேட்டர் பத்திரிகையில் எழுதியிருந்த கட்டுரையில் கண்டிருந்த விஷயங்களை மேற்கோள் காட்டி ஒரு குறிப்பை எழுதியுள்ளளது. அதில், ஜான் ரீட் ரஷ்யாவில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை நேரில் கண்டு தெரிவித்துள்ள விவரங்களைப் பார்த்தால், மேலை நாட்டுப் பத்திரிக்கைகள் சொல்லி வந்த கருத்துக்களுக்கு மாறாக, போல்ஷிவிக்குகள் “பெரும்பாலும் ருஷ்ய மகா ஜனங்களின் சம்மதத்தைப் பின்பலமாகக் கொண்டு” ஆட்சி புரிந்து வருவதாகத் தெரியவருவதைக் குறிப்பிட்டு, “லிபரேட்டர் பத்திரிகையில் ஜான் ரீட் எழுதியிருப்பதைப் பார்த்தால், அமித வாதிகள் போல்ஷிவிக்குகள் - ஆ-ர்) ஆட்சி முறை அவ்வளவு மோசமாக இருக்கவில்லை என்றும், கூடிய வரையில் ஒழுங்காகவும், அநேகமாக முன்னையிலும் நேர்மையாகவும் இருக்கிறதென்றும் சொல்லாமலிருக்க முடியவில்லை” என்று எழுதியுள்ளது. (தமிழகம் கண்ட லெனின்தொகுப்பு : சி.எஸ்; கே. எம்.) எல்லாவற்றுக்கும் மேலாக 3. 5. 1917 அன்று சுதேசமித்திரன் “ருஷ்யாவின் பிரஸிடெண்டு மிஸ்டர் லெனின் குணாதிசயங்கள்” என்ற கட்டுரையை அந்த இதழின் முதல் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. தமிழில் லெனினையும் அவரது வாழ்க்கையையும் பணியையும் பற்றி முதன்முதலில் பிரசுரமான முழுநீளக் கட்டுரை இதுவே எனக் கூறலாம்.

சுதேசமித்திரன் இதன் பின்னரும் ரஷ்யாவைப் பற்றிப் பல குறிப்புக்களை வெளியிட்டு வந்தது. சோவியத் நாட்டில் மத நம்பிக்கை உள்ளவர்களையும், மத குருக்களையும் சோவியத் அரசு கொடுமைப் படுத்தி வந்ததாக மேலை நாட்டுப் பத்திரிகைகள் பரப்பிவந்த அவதூறுப் பிரசாரத்துக்குப் பதிலாக,

19