இயக்கத்தின் குடியரசு பத்திரிக்கையில், அக்டோபர் புரட்சியையும், லெனினையும், சோவியத் யூனியனையும் பற்றிப் பல கட்டுகரைகள் எழுதினார். அந்த இயக்கத்தில் அக்காலத்தில் சோஷலிஸ்டுகளின் அணி ஒன்றும் இடம் பெற்றிருந்தது. 1932 இறுதியில், சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த சோஷலிஸ்டுகளின் மாநாடு நடந்தபோது, அந்த சோஷலிஸ்டுகளுக்கான ஒரு திட்டத்தைச் சிங்காரவேலர் சமர்ப்பித்தார்; விவாதத்துக்குப் பின்னர் திட்டம் ஏற்றுக்கொள்ளவும் பட்டது. என்றாலும் பின்னர் பெரியார் ஈ.வே.ரா, பிரிட்டிஷ்-ஆதரவு மனப்பான்மை கொண்ட இஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்கத் தீர்மானித்து விட்டதால், சுய மரியாதை இயக்கத்திலிருந்த சோஷலிஸ்டுகள் அதனை விட்டு 1934-ல் வெளியேறினர்.
தமிழ் நாட்டின் முதுபெரும் தொழிற்சங்கத் தலைவரான கே.முருகேசன் இவ்வாறு எழுதுகிறார்:
“1935-ல் ’புது உலகம்’ பத்திரிகை தொடங்கப்பட்டது. தலைவர் ம. சிங்காரவேலு அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் வெளிவந்த இந்த ஏட்டின் ஆசிரியராகவும் வெளியிடுபவராகவும் தான் பொறுப்பேற்றேன். தோழர் சிங்காரவேலு அவர்களின் முற்போக்குக் கட்டுரைகள் அதில் இடம் பெற்றன... இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியை 1934-ல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தடை செய்தது. எனவே சென்னை நகரில் ”தொழிலாளர் பாதுகாப்புச் சங்கம்” (Labour Protection League) என்ற பெயரில் கம்யூனிஸ்டுகள் இயங்கி வந்தனர். புது உலகம் பத்திரிகையை நடத்தி வந்த நாங்கள் இந்தச் சங்கத்துடன் தெருங்கிய தொடர்பு வைத்துக் கொண்டோம். ... மார்க்சிய - லெனினியக் கட்டுரைகளைப் புது உலகம் விரும்பி வெளியிட்டது” (தாமரை - ஏப். 70). புது உலகம் ஈராண்டுக் காலம் வெளிவந்து பிறகு நின்று விட்டது. இந்தப் பத்திரிகையோடும் கம்யூனிஸ்டுகளோடும் தொடர்பு கொண்டிருந்த சிங்காரவேலர் 1946-ல் தாம் காலமாகிற வரையிலும் சோவியத் யூனியனின் நண்பராக வும், சோஷலிசத்தின் ஆதரவாளராகவுமே இருந்து வந்தார்.