பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதிதாசன்

கனக சுப்புரத்தினம் என்ற தமது இயற்பெயரைப் ‘பாரதிதாசன்’ என்று மாற்றியமைத்துக் கொண்ட பாரதிதாசன், பாரதியின் அஞ்ஞாத வாச காலத்தின் போது பாண்டிச்சேரியில் பாரதியோடு நெருங்கிய தோழமை கொண்டவராக இருந்ததோடு மட்டுமல்லாமல் பாரதியின் காலத்திலேயே திறமைமிக்க இளம் கவிஞராகவும் திகழ்ந்தார். மேலும் தமது புனைபெயருக்கேற்ப, நெடுங்காலம் வரையிலும் அவர் பாரதியின் கருத்து வழி நின்று, அவரது உண்மையான சீடராகவும் விளங்கினார். என்றாலும், பிற்காலத்தில் அவர் பெரியார் ஈ.வெ.ரா.வின் கருத்துலகத் தொண்டராக மாறி, அறுபதாம் ஆண்டுகளில் தாம் காலமாகும் வரையிலும், மூர்க்கமான தமிழினப்பற்றையும், பார்ப்பனீய எதிர்ப்பையுமே முழு மூச்சாகக் கொண்டு எழுதி வந்தார். எனினும், ரசிகர்கள் பலரும் அவரைப் ‘புரட்சிக் கவிஞர்’ என்று அருமையோடும் பெருமையோடும் குறிப்பிடும் அளவுக்கு அவர் வலிமைமிக்க கவிஞராகவும் விளங்கினார். முப்பதாம் ஆண்டுகளிலும் நாற்பதாம் ஆண்டுகளிலும் அவர் எழுதிய மிகப் பெரும்பாலான கவிதைகள், மானிட மகத்துவத்தையும், சமுதாய, பொருளாதார சமத்துவத்தையும் ஏற்றிப் போற்றும் கருத்துக்கள் நிறைந்த, வலிமையும் வைரமும் பாய்ந்த கவிதைகளாக இருந்ததே இதற்குக் காரணம்.

அக்டோபர் புரட்சியின், சோஷலிசக் கருத்துக்களின் செல்வாக்குக்கு ஆட்பட்ட கவிஞர்களில் பாரதிதாசனும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க கவிஞரேயாவார். வீழ்ந்து கிடக்கும் மனிதனுக்குத் தெம்பூட்டும் விதத்தில் தாம் எழுதிய கவிதையொன்றில் அவர் இவ்வாறு பாடியுள்ளார்:

மனிதரில் நீயுமோர் மனிதன் : மண்ணன்று
இமைதிற! எழுந்து நின்று எண்ணுவாய்.
தோளை உயர்த்து! சுடர்முகம் தூக்கு!
மீசையை முறுக்கி மேலே ஏற்று!

38