பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“எல்லோரும் ஓர் குலம்” என்ற நூல் வெளிவந்தது. இதனை எழுதியவர் தமிழ் வாசகர்கள் எழுத்தாளர்கள் மத்தியில் “ப.ரா” என்று பிரபலமாகியிருந்த முதுபெரும் தேச பக்தரும் சிறந்த எழுத்தாளருமான ப. ராமசாமி. இந்நூல் அக்டோபர் புரட்சி, அதன் சாதனைகள், சோஷலிசக் கோட்பாடுகள் முதலியவற்றைக் கற்றாராய்ந்து எழுதிய சிறந்த நூலாக விளங்கியது. சோஷலிசத்தையும், அதனை அடைவதில் ரஷ்ய மக்கள் நடத்திய போராட்டத்தையும், பெற்ற வெற்றியையும் புரிந்து கொள்வதற்கு, இந்த நூல் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல இளைஞர்களுக்கு அந்நாட்களில் ஒரு பாலபாடமாக விளங்கியது என்றே சொல்லலாம்.

யுத்த காலத்தில்...

இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் சோவியத்யூனியன் தன் மீது தொடுக்கப்பட்ட நாஜித் தாக்குதலை எதிர்த்து மாபெரும் தேசபக்தப் போரை நடத்திவந்த நாற்பதாம் ஆண்டுகளின் முற்பகுதியிலும், அதன்பின் போரில் சோவியத்யூனியன் வெற்றி பெற்ற காலத்திலும், தமது தாயகத்தைப் பாதுகாப்பதில் சோவியத் மக்களும் போர்வீரர்களும் புரிந்த வீரச் செயல்களைக் குறித்தும், அவர்கள் பாதுகாத்து நின்ற லட்சியங்களைக் குறித்தும், சோஷலிசத்தின் தனிச் சிறப்புமிக்க ஜீவசக்தியையும் வலிமையையும் குறித்தும், தமிழில் கட்டுரைகளும், சிறு பிரசுரங்களும், புத்தகங்களும் இடையறாது வெளிவருவது மிகவும் சகஜமாக இருந்தது. மேலும், இந்தக் காலகட்டத்தில் மார்க்சிய, லெனினிய நூல்களின் மீதும், சோவியத் நூல்களின் மீதும் விதிக்கப்பட்டிருந்த தடை அகற்றப்பட்டதன் பயனாக, இத்தகைய புத்தகங்களும் பெருமளவில் இங்கு வந்தன. இதனால் சோவியத் யூனியனையும் அக்டோபர் புரட்சியையும் பற்றிய நூல்களை மட்டுமல்லாமல், தலைசிறந்த சோவியத் நாட்டு இலக்கியப் படைப்புக்கள் பலவற்றையும் தாராளமாகப் படித்துப் பார்க்கக் கூடிய வாய்ப்பு எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் கிட்டியது. இந்தக் கால

42