பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பயணத்தின் போது அவர் அக்டோபர் புரட்சியின் சாதனைகளை நேரில் கண்ணாரக் காணும் வாய்ப்பினைப் பெற்றார். அந்தச் சாதனைகள் அவர் மனத்தைப் பெரிதும் கவர்ந்தன. இதன் பயனாக, அவர் சோவியத் யூனியனிலிருந்து திரும்பி வந்த பின்னர், சோவியத் யூனியனையும் அதன் சாதனைகளையும் பற்றிப் பல பாடல்கள் எழுதினார். இவை “சோவியத் கீதாஞ்சலி”, “லெனின்- காந்தி” என்ற தலைப்புக்களில் அவர் வெளியிட்ட இரு கவிதைத் தொகுப்புக்களாகப் பின்னர் வெளிவந்தன.

அக்டோபர் புரட்சியின், அதன் லட்சியங்களின் செல்வாக்கு, காலப்போக்கில் சோவியத் யூனியன் சாதித்துக் காட்டிய சாதனைகள், யுத்தப் பிற்கால ஆண்டுகளில் வளர்ந்தோங்கிய அதன் சர்வதேச கெளரவம், சர்வதேச ஸ்தானம், நட்புறவையும் சமாதானத்தையும் போற்றி வரும் அதன் உறுதியான கொள்கை, தேச விடுதலைப் போராட்டங்களுக்கு அது அளித்துவரும் தங்கு தடையற்ற ஆதரவு, இளம் சுதந்திர நாடுகளின்பால் அது கொண்டுள்ள தன்னலமற்ற நட்புறவு - ஆகிய இவையாவும், குறிப்பாக ஐம்பதாம் ஆண்டுகளின் தொடக்கத்திலிருந்தே பல தமிழ் எழுத்தாளர்களின் உள்ளங்களைக் கவர்ந்து அவர்களது படைப்புகளில் பிரதிபலித்து வரத்தொடங்கின. இது விஷயத்தில், அத்தகைய எழுத்தாளர்களையும் அவர்களது படைப்புக்களையும் அறிமுகப்படுத்துவதிலும், வளர்ப்பதிலும், பிரபலப்படுத்துவதிலும் சாந்தி, சரஸ்வதி, தாமரை ஆகிய கலை இலக்கிய சஞ்சிகைகள் பெரும்பங்கு வகித்து வந்தன.

இதன் பயனாக, நாவல் இலக்கியத் துறையில் ஏ.எஸ்.கே.யின் தங்கம்மா, ஆ. பழனியப்பனின் வெளியேறிய தெய்வம், பொன்னீலனின் கரிசல் மற்றும் சில நாவல்களும், சிறு கதைத் துறையில் கு. அழகிரிசாமி, ஜெயகாந்தன், காலஞ்சென்ற விந்தன் மற்றும் ஏராளமான இளம் எழுத்தாளர்களின் சிறு கதைகளும், கவிதைத் துறையில் காலஞ்சென்ற ‘தமிழ் ஒளி’, குயிலன், கே. சி. எஸ். அருணாசலம், சிற்பி பாலசுப்ரமணியன், மீ.ராஜேந்திரன் (மீரா) மற்றும்

46