பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பலரது கவிதை நூல்களும், பாடல் துறையில் காலஞ்சென்ற பிரபல திரைப்படப் பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், காலஞ்சென்ற வெ. நா, திருமூர்த்தி ஆகியோரும், மற்றும் சிலரும் படைத்த படைப்புக்களும், இலக்கிய விமர்சனத் துறையில் நா.வானமாமலை, ஆர். கே. கண்ணன் மற்றும் சிலரது விமர்சனப் படைப்புக்களும் ஆராய்ச்சி நூல்களும், இந்த எழுத்தாளர்களின் சிந்தனையில் அக்டோபர் புரட்சியின் லட்சியங்கள் செலுத்தியுள்ள செல்வாக்கையும், சோவியத் இலக்கியங்கள் இவர்களைக் கவர்ந்துள்ள வலிமையையும், சோவியத் இலக்கிய மேதைகளிடமிருந்து இவர்கள் சுவீகரித்துக் கொண்ட இலக்கியக் கண்ணோட்டத்தையும், அணுகல் முறையையும் நன்கு பிரதிபலிப்பவையாக விளங்குவதைக் காணலாம். இக்கட்டுரையாசிரியரின் கதை, கவிதை, நாவல், இலக்கிய விமர்சனம் முதலிய இலக்கியப் படைப்புகள் பலவும் இந்தச் செல்வாக்குக்கு ஆட்பட்டவையேயாகும்.

சொல்லப்போனால், கடந்த இருபது ஆண்டுகளில் அக்டோபர் புரட்சி லட்சியங்களின்பால் மேலும் மேலும் பல தமிழ் எழுத்தாளர்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர் என்றே சொல்லலாம். இந்தச் செல்வாக்கு இன்றைய தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமான எழுத்தாளர்கள் மத்தியில் ஒரு “சோஷலிச அணியை” உருவாக்கியுள்ளது என்றே கூற முடியும். குறிப்பாக, இந்தச் செல்வாக்கு இன்று பெரும்பாலும் ‘வசன கவிதைகள்’ எழுதும் ஏராளமான இளங்கவிஞர்கள் மத்தியில் நன்கு புலப்படுகிறது. இவர்களிற் சிலர் “வானம்பாடிகள்” என்ற பெயரில் ஒரு கவிஞர் கோஷ்டியாகவே செயல்பட்டு வருகின்றனர். சமீப காலத்தில் இவர்கள் “சிநேக புஷ்பங்கள்” என்ற தலைப்பில், சோவியத் யூனியனது சாதனைகளையும், இந்திய சோவியத் நட்புறவையும் போற்றிப் புகழும், வாழ்த்தி வரவேற்கும் தமது படைப்புக்களின் தொகுதி ஒன்றை நூல் வடிவில் வெளிக்கொணர்ந்தும் உள்ளனர்.

47