பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொந்தளிப்பு மிக்க அந்நாட்களில் ரஷ்யாவில் நிலவிய நிலைமையைக் குறித்துத் தாம் எழுதிய இந்தக் குறிப்புக்களில், "ருஷ்ய ஜனங்களாகிய ஆடுகள்மீது அரசேற்றும் கடுவாய் அரசனும் அவனது ஓநாய் மந்திரிகளும் நெடுங்கால மாய்த் தரித்திருக்க மாட்டார்கள். இவர்களின் இறுதிக்காலம் வெகு சமீபமாக நெருங்கி விட்டதென்பதற்கு தெளிவான பல சின்னங்கள் தென்படுகின்றன" என்று ஜாராட்சியின் வீழ்ச்சியைக் குறித்துத் தன்னம்பிக்கையோடு எழுதியதோடு மட்டுமல்லாமல், "சுயாதீனத்தின் பொருட்டும், கொடுங்கோன்மை நாசத்தின் பொருட்டும், நமது ருஷ்யத் தோழர்கள் செய்துவரும் உத்தமமான முயற்சிகள் மீது ஈசன் பேரருள் செலுத்துவாராக" என்றும் எழுதி, போராடும் ரஷ்ய மக்களுக்குத் தமது பூரண ஆதரவையும் தெரிவித்திருந்தார் பாரதி. இந்தியா பத்திரிகையில் பாரதி எழுதியுள்ள கட்டுரைகள், குறிப்புகள் முதலியவை அண்மையில் புத்தக வடிவில் (பாரதி தரிசனம் - இளசை மணியன் தொகுப்பு ; முதல் பாகம், 1975) வெளிவந்ததன் மூலம் நமக்குக் கிடைத்துள்ள இந்தக் குறிப்புக்களே, 1905-1907 ம் ஆண்டுகளின் ரஷ்யப் புரட்சியைப் பற்றித் தமிழில் நமக்குக் கிட்டக் கூடிய ஆரம்பகாலக் குறிப்புகள் எனலாம்.

இங்கு ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். அக்காலத்தில் ஓர் அகில உலகக் கண்ணோட்டத்தையும், புரட்சிகரப் போக்கையும் வளர்த்துக் கொண்டிருந்த ஒரு சிலரில், சமுதாய விடுதலையும் பொருளாதார விடுதலையும் கிட்டும்போதுதான் அரசியல் விடுதலை அர்த்த புஷ்டியும் பூரணத்துவமும் பொருந்தியதாக இருக்கும் என்று கருதிய சிலரில், பாரதியும் ஒருவர், இத்தகைய உணர்வினாலும், ரஷ்யப் புரட்சியிலிருந்து அவர் பெற்ற உத்வேகத்தின் பயனாகவும்தான், ரஷ்யப் புரட்சி நிகழ்ந்த காலத்திலேயே (1907ல்) தாம் எழுதி வெளியிட்ட "சுதந்திரப் பள்ளு" பாடலில் பாரதி பின்வருமாறு பாடினார்:

எங்கும் சுதந்திரம்

என்பதே பேச்சு! - நாம்

7