பக்கம்:அங்கும் இங்கும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

களாக, ஏதோ ஒரளவு தனியார் பள்ளிகளுக்கு உதவுகிறார்கள்.

தனியார் கல்விக்கூடங்களையே நம்பியிருப்பது, எதிர் வீட்டுக் கதவை, நம் வீட்டுக் காவலுக்கு நம்பியிருப்பது போன்றது. இந்நிலையும் உணர்ச்சியும் அந்நாட்டில் உருவாயின. எனவே பொதுத் துறையில் (உள்ளாட்சிக் கழகங்களின் சார்பில்) கல்விக்கூடங்கள் எழுந்தன. தொடக்க நிலை கல்விக்கூடங்களோடு நிற்கவில்லை. அவர்களது அந்தக்கால நினைப்புகூட தொடக்கப்பள்ளி நிலையில் நின்று விடவில்லை. ஆகவே, உயர்நிலைப் பள்ளிகளையும் நிறுவினர். தோன்றிய கல்விக்கூடங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக இருந்துவிடவில்லை, எண்ணிக்கையற்ற கல்விக் கூடங்கள் எழுந்தன. உள்ளாட்சி மன்றங்கள் பள்ளிக்கூடம் நடத்தினால், இராச்சிய அரசுகள் கல்லூரிகளையும் பல்கலைக் கழகங்களையும்-பெரிய பெரிய பல்கலைக் கழகங்களையும் - நடத்துகின்றன.

இன்று வளமிக்க அமெரிக்க நாட்டில் மொத்தத்தில், கல்வித் துறையில்-எல்லா நிலைக் கல்வியிலும் - தனியார் துறையைவிடப் பொதுத் துறையில்தான் அதிக இடம் உண்டு; அதிக வசதிகள் உண்டு ; அதிக வாய்ப்புகளும் உண்டு. எனவே, கல்வி ஒடையில் உயர்கல்வி ஒடையில்கூட ஏழை எளியவர்கள், பொதுமக்கள் (பெருமக்கள் மட்டுமல்ல) நேராகப் பருக முடிகிறது. பொதுத்துறைக் கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் அவற்றின் முதல்வர்கள், வேண்டுமென்றே, தெரிந்தே, மார்க்குக் குறைந்த பலரை, வாட்டி வதைக்கும் வறுமைச் சூழ்நிலையிலிருந்து வரும் பலரை, எழுத்தறியாக் குடும்பங்களிலிருந்து கல்லூரியை எட்டிப் பார்க்கும் பலரைச் சேர்த்துக் கொள்வதாக அமெரிக்காவில் கேள்விப்பட்டபோது திடுக்கிட்டேன்.

தேவைக்கு மேல் இடம் இருப்பதால் காலியாக விடுவதற்குப் பதில், கண்டவர்களைச் சேர்த்துக் கொள்கிறார்களோ என்ற ஐயம் எழுந்தது. அங்கும் கல்விக்கூட