பக்கம்:அங்கும் இங்கும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

எங்கிருந்தும் படித்துக் கொள்ளலாம் என்ற பதில், கிண்டலான அல்லது புரட்சிகரமானதொரு எதிர்காலக் கல்வித் திட்டத்தின் முளையா ? எதிர்காலமே காட்டட்டும்.

நம் கல்வி வாய்ப்பினையும் வசதிகளையும் மேலும் பெருக்க விரும்புகிறீர்களா ? பொதுத் துறைக் கல்விக் கூடங்களை ஏராளமாக்க ஆசையா? பரிந்துரை கூற ஆள் இல்லாத அவைகளிலும் முதல் தரமான வசதிகளைக் கொடுக்க வேண்டுமென்று விரும்புகிறிர்களா ?

கங்கை, யமுனை. கோதாவரி, கிருஷ்ணா ஆகிய ஆறுகளில் நீர்ப்பெருக்கை முழுக்க முழுக்கப் பாசனத்திற்கும் மின்சார உற்பத்திக்கும் பயன்படுத்தும் பெரும் பணியில் பெரும் கவனத்தைத் திருப்ப வேண்டுமென்று விரும்புகிறீர்களா ? நல்லது. பெரியவர்களிடம் சொல்லத் தவறாதீர்கள். ஆளை மாற்றுவதைப் பற்றிப் பரிந்துரை கூறுவதோடு, ஆற்று நீரை மாற்றுவதைப் பற்றியும் கூறுங்கள்.

கல்விக்கூடம்தோறும் பயிர்த்தொழிலுக்கு ஏற்பாடு செய்யக்கூடாதா ? இப்படி கேட்கிறதா உங்கள் அறிவு ? செய்யக்கூடும். செய்ய வேண்டும். மனம் உண்டானால் இடம் உண்டு.

பஞ்சாயத்து ஆட்சி வந்த பிறகு, ஊர்தோறும் உள்ள புறம்போக்கு ஊருக்குச் சொந்தம். அதிலே ஒரு பங்கை பள்ளிக்கூடத் தோட்டத்திற்கு ஒதுக்கி வைத்துப் பயன்படுத்தச் செய்தால் எவ்வளவு விளையும் ? உழைப்பிற்கு உயர்வளிக்கும் மனப்போக்கு மட்டுமல்ல விளையப் போவது; மலைமலையாக நெல்லும் கோதுமையும், வண்டி வண்டியாக வாழையும் கிழங்கும், காய்களும், கனிகளும் பயிரிட்டுக் குவிக்கலாம். ஆமாம், மலைக்காதீர்கள் !

இன்று கல்விக்கூடங்களின் எண்ணிக்கை சிலவல்ல, சில நூறுகள் மட்டுமல்ல, இலட்சோப இலட்சம். தமிழ்நாட்டில் மட்டும் முப்பத்து மூவாயிரம்-இவற்றில் உள்ளவர்களோ கோடான கோடி, கோடி கோடி கைகள் கூடிக்கூடி உழைத் தால், கோடி கோடி பொருள்கள், நாடி நாடி வருமே.