பக்கம்:அங்கும் இங்கும்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
20
 

அறிவு, வெள்ளம்போல் பெருகும். அறிவு வெள்ளமே பள்ளத்தில் கிடக்கும் பலரையும் தூக்கிவிடும் : உயர்த்தி விடும். முதியோர் கல்வித் தொண்டருக்கு ஏனோ பஞ்சம் ? இவ்வளவு விரைவிலா காந்தியத் திட்டத்தை மறந்து விட்டோம் ; இவ்வெண்ணங்களை எழுப்பிய காட்சிக்கு வாருங்கள்.

தாஷ்கண்ட் நகரம். முன் இரவு நேரம். ஒன்பது மணி. இலையுதிர் காலத்தின் தொடக்கம் பூங்காக்களில், பசும் புல் தரை மாறவில்லை. இங்கும் அங்கும் போடப்பட்டிருந்த இருக்கைகள் சில்லிட்டு விடவில்லை. காற்று மெல்ல வீசிக் கொண்டிருந்தது, அதிலே குளுமையும் இனிமையும் இருந்தன. அஞ்சுமளவு கடுங்குளிரும் சீறலும் இல்லை. வானத்திலே விண்மீன்கள் மின்னின. திங்களும் தவழ்ந்தது. இவ்வினிய சூழ்நிலையில் அந்நகரப் பூங்காக்கள் திறந்து கிடந்தன. அவை எங்களை வா, வா’ என்று அழைத்தன. எங்களை மட்டுமா, யாரையுமே, வெளியே வந்து, இருந்து, மகிழ அழைக்கும் காலமும் சூழலும் அப்போது. பல்லைக் கடித்துக்கொண்டு அவற்றை விட்டு விலகிப்போனோம். நெடுஞ்சாலையொன்றில், வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்தோம். கண்ட காட்சியும், கேட்டு அறிந்த தகவலும், எழுந்த எண்ணங்களும் இதோ உங்கள் முன்னே.

ஒரு மாடிக் கட்டிடத்தின் தெருவோர அறையொன்றில், முப்பது நாற்பது பேர் அமர்ந்திருந்தனர். அத்தனை பேரும் பெண்கள். இளங்கன்னியரல்லர். தள்ளாதவர்களா ? அல்லர். நாற்பது, ஐம்பது வயது மதிக்கத்தக்க மாதர்கள். அம்மாதர்களுக்கு எதிரே ஒரு மாது வீற்றிருந்தார். அவர் பக்கத்திலே கரும்பலகை ஒன்றிருத்தது. அது மெய்யாகவே பெயருக்கேற்ப கருப்பாயிருந்தது. அதிலே ஏதோ எழுதிப் போடப்பட்டிருந்தது. மாதர்களெல்லாரும் எதையோ பார்த்துப் படித்துக் கொண்டிருந்தார்கள். இக்காட்சியைக் கண்டோம். இக்கூட்டத்தைப் பற்றிக் கேட்டறிந்தோம். அப்போதே கேட்டறிந்தோம்.