பக்கம்:அங்கும் இங்கும்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
21
 

இக்கூட்டம் அரசியல் கூட்டமல்ல கருத்தரங்கல்ல. இலக்கியச் சொற்பொழிவுமல்ல. இலக்கிய நோட்டம் என்ற திரை மறைவு அரசியல் ஊடுருவலுமல்ல. சமயச் சொற்பொழிவின் பேரால் நடக்கும் ஆட்சி எதிர்ப்பு முயற்சியும் அல்ல. பின் என்ன ? கல்வி வகுப்பு. பாலர் கல்வி வகுப்பல்ல. தாய்மொழிக் கல்வி வகுப்பல்ல. தாய்மொழிப் புலமை வகுப்பல்ல ; பிற மொழிக் கல்வி வகுப்பு. உஸ்பெக் மாதர்கள்-முதியோர்-படிக்கும் ஜெர்மன் வகுப்பே நாங்கள் கண்டது. அம்மாதர்கள், ஏற்கெனவே தாய்மொழியாகிய உஸ்பெக்கையும் சகோதர மொழியாகிய இரஷிய மொழியையும் கற்றுத் தேறியவர்கள். அலுவலகங்களிலும் தொழிற் கூடங்களிலும் பணிபுரிகிறவர்கள்.

’படியுங்கள், படியுங்கள். மேலும் படியுங்கள்’ என்ற நல்லுரையைப் பின்பற்றி மேலும் மேலும் புதிது புதிதாகக் கற்றுக்கொள்பவர்கள், அம்மாதர்கள். தங்கள் அன்றாட அலுவல் தீர்ந்த பின், அக்கடா என்று வீட்டிலே விழ்ந்து கிடக்காமல் அல்லது இன்றே நன்று ; எனவே இன்றே களித்திரு என்று பூங்காக்களில் பூரித்துக் கிடக்காமல், ’அறிவின் அளவே வாழ்வும்’ என்பதை உணர்ந்து, இரவு நேரங்களில், வேளைக் கல்லூரியில் : சேர்ந்து, புது மொழி யொன்றைக் கற்கும் முதிய மாணவிகள் அவர்கள். அவர்களிலே பலருக்குக் குடும்பப் பொறுப்பும் உண்டு. இத்தனைக்குமிடையிலேதான், அவர்கள் தொடர்ந்து கற்கிறார்கள்; முதுமையிலும் கற்கிறார்கள். இரவுதோறும் கல்லூரியில் கற்கிறார்கள் பிற மொழிகளைக் கற்கிறார்கள்- மொழித் தீண்டாமையை நினைவிலும் கொள்ளாது கற்கிறார்கள்.

நாங்கள் கண்டது காட்சிக்காக நடக்கும் கல்லூரியா ? இங்கும் அங்கும் பெருநகர்களின் நெடுஞ்சாலைகளில் வெளி நாட்டவர்களுக்குக் காட்ட நடத்தப்படும் கல்லூரியா ? இல்லவே இல்லை. வேளைக் கல்லூரிகளும், வேளைப்
அ. இ - 2