தாஷ்கண்ட் மகளிர் கல்வி ஆர்வத்தைக் கண்டேன் உங்களுக்கும் காட்டினேன். முதிய மகளிர், வெறும் வீட்டாட்சியர் அல்லர்; பகலெல்லாம் தொழில் புரிந்த மாதர், இரவுக் கல்லூரியில் சேர்ந்து, புதுமொழி ஒன்றைக் கற்கும் காட்சியினைக் கண்டேன். யான் பெற்ற அறிவு இன்பத்தை உங்களுக்கும் அளித்தேன்.
இன்று தாஷ்கண்ட் நகரிலிருந்து, மாஸ்கோவிற்கு இட்டு செல்லுகிறேன், வாரீர். உலகப் பெருநகரங்களில் ஒன்றாகிய அங்கு நடந்த நிகழ்ச்சிகள், வரலாற்றுப் புகழ் பெற்ற நிகழ்ச்சிகள் எத்தனை, எத்தனையோ! நான் கண்ட நிகழ்ச்சியோ, எளிய நிகழ்ச்சி. ஆனால் அறிவுடையோர் அறிய வேண்டிய நிகழ்ச்சி. இரஷியர் ஆட்டும் சுண்டு விரல் கண்டு வையம் ஆடப் போகிறதோ என்று அஞ்சுவோர் அனைவரும் உணர வேண்டிய நிகழ்ச்சி.
மாஸ்கோ நகரில் பள்ளிக்கூடம் ஒன்றைக் காணச் சென்றோம். பார்ப்பதற்கும் கேட்பதற்கும் அங்கு நிறைய இருந்தன. எனவே மூன்று மணிகள் ஒடிவிட்டன.
பின்னர், வெளியே வந்தோம். குளிர்காற்று சீறிக் கொண்டிருந்தது. மாலை வெயில் விலகிவிட்டது. எங்களை