பக்கம்:அங்கும் இங்கும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

அழைத்து வந்த வாடகைக் கார், பள்ளியின் எதிரே. தெருவோரம் காத்துக்கொண்டிருந்தது. தெருவில், மக்கள் கூட்டம் அதிகம்; வாகனப் போக்கு வரத்து நிறைய.

இந்நிலையில், நான் முதலில் காரை நெருங்கினேன், கதவைத் திறக்க முயன்றேன் ; முடியவில்லை. அது பூட்டிக் கிடந்தது. கண்ணாடிகளும் உயர்த்தப்பட்டிருந்தன. காரோட்டி தம்மிடத்தில் உட்கார்த்திருக்கக் கண்டேன். எனவே, கதவை மெல்லத் தட்டினேன். அது, அவர் செவியில் விழவில்லை. அவர் மெய்மறந்து எதையோ படித்துக் கொண்டிருந்தார். சில நொடிகளில் எங்கள் குழுவைச் சேர்ந்த மற்றவர்களும் வந்துவிட்டனர். எங்களோடு பயணஞ் செய்யும் இரஷிய மொழிபெயர்ப்பாளர். கதவைத் தடதடவென்று ஓங்கித் தட்டினர். கரோட்டியின் காதும் கேட்டது. சட்டென்று, கையிலிருந்த நூலை மூடி வைத்தார். கதவுகளைத் திறந்தார்.

நாங்கள், உரிய இடங்களில் அமர்ந்தோம். கதவுகள் மூடப்பட்டன. கார் எங்கள் ஒட்டலை நோக்கிப் பிறந்து சென்றது.

காரோட்டி மெய்மறந்து படிப்பதைக் கண்டதும், எனக்கு ஓர் ஐயம் மின்னிற்று. சந்தடி மிகுந்த இச்சாலையில். மக்கள் நடமாட்ட வேடிக்கை நிறைத்த இந்தச் சாலையில், இவ்வளவு ஈடுபாட்டோடு படித்த நூல் எதுவாக இருக்கும் ; எது பற்றி இருக்கும்? காதல் கதையோ? போர்ப் பரணியோ ? இதுவே என் ஐயம். இந்த ஐயத்தைப் போக்கிக் கொள்ளத் துணிந்தேன். அந்நூல் என்ன நூல் என்று, கேட்டுச் சொல்ல முடியுமா என்று, மொழி பெயர்ப்பாளரை ஆங்கிலத்தில் வினவினேன். அவர் காரோட்டியை இரஷ்ய மொழியில் வினவினார். அது விஞ்ஞான நூல் என்று பதில் வந்தது. "அதைப் பார்க்கலாமா?" என்றேன்.