பக்கம்:அங்கும் இங்கும்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
45
 

அநீதிகளைக் கண்டித்தனர். அடி உதை பட்டனர். சிறையிலே அடைபட்டு, வாடி மடிந்தனர். தலையையும் கொடுத்தனர். இறுதியில் வெற்றியும் பெற்றனர். பொது மக்களுடைய பேச்சுரிமையை ஆழமாக நிலைநாட்டினர்.

இன்று அந்நாட்டில் முழுப் பேச்சுரிமை நிலவுகிறது. சட்ட நூல்களில் கிடக்கும் உரிமையல்ல, அங்கு நிலவுவது. எல்லாரும் அன்றாடம் பயன்படுத்தும் பேச்சுரிமையை அங்கே பளிச்சென்று காணலாம்.

பேச்சுரிமைப் போராட்டத்தில் சிறப்பு இடம் பெற்ற ஓரிடம், அந்த ‘ஹைட் பார்க்கி’ன் மூலையொன்று. அங்குத்தான் சில நூற்றாண்டுகளுக்கு முன், பேச்சுரிமைத் தலைவர்களும் தொண்டர்களும், அவ்வுரிமையை நிலைநாட்ட, அக்கால நடைமுறையில் இருந்த அரசியல் தவறுகளையும் பிறவற்றையும் கண்டிக்கும் களம் அமைத்து, போராடி வந்தனர்.

அக் களத்திலே பேச்சு மேடையில்லை. அன்றும் இல்லை; இன்றும் இல்லை. அன்றைய அரசியலில், சமுதாயத்தில், வாழ்க்கை முறையில் கண்ட தீங்குகளைப் பற்றிக் கொதிப்படைந்தவர்கள் அம் மூலைக்குச் சென்று, கருத்து முழக்கம் செய்வார்கள். பூங்காவிற்கு வந்தவர்களில் துணிந்தவர்கள் பேச்சாளரைச் சுற்றி நின்று கேட்பார்கள்.

பேச்சு, தானாகவே முடியுமென்று சொல்ல முடியாது. அரசின் அடக்குமுறையாளர்களால், பேச்சாளர், பேசத் தொடங்கியதும், கைது செய்யப்படுவதும் உண்டு. விட்டுப் பிடிப்பதும் உண்டு. சிறிது நேரம் பேசியதும், தண்டிப்பதற்குப் போதிய ஆதாரம கிடைத்துவிட்டது என்று தெரிந்ததும் கைது செய்யப்படுவதும் உண்டு. கைது செய்யப்படாமல் ஒருவர் பேச்சு முழுவதும் பேசி முடித்தால், அநேகமாக அப்பேச்சில் உயிரோ கருத்தோ இல்லை என்றே பொருள்.