ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தோராம் ஆண்டு, செப்டம்பர் திங்கள், நானும் என்னுடன் வந்த புகழ்பெற்ற இரு இந்தியக் கல்வியாளர்களும் லெனின் கிராட் நகரத்திற்குச் சென்றோம்.
அங்குள்ள பல்கலைக் கழகத்தில், தமிழ் மொழியைக் கற்றுக்கொடுக்கிறார்கள் என்று அறிந்து மகிழ்ந்தோம். தென்னாடுடைய தமிழ் மொழியை, எந்நாடும் கவனிக்கும் இரஷியாவில், வடபால் உள்ள இரஷியாவில், வடக்கே உள்ள லெனின் கிராட் பல்கலைக் கழகத்தில் கற்றுக் கொடுக்கிறார்கள் என்று கேட்டபோது, காதும் இனித்தது: கருத்தும் இனித்தது ஊனும் உயிரும் இனித்தன.
முதல் நாள் ; நடுப்பகல் உணவு வேளை. நாங்கள் மூவரும், தங்கியிருந்த ஒட்டலுக்குள் நுழைந்தோம். தனியே, யாருக்கோ காத்துக் கொண்டிருந்த அந்த வாலிபர் ஒருவர் எங்களை அணுகினார்.
“நீங்கள் தானா வேலு என்பது ?” என்று தூய தமிழ் உச்சரிப்பில், என்னை வினவினார். என்னோடு வந்த இந்தியர் இருவருக்கும் தமிழ் தெரியாது. இவர்கள் தவறாக நினைத்து விடக் கூடாதே என்பதற்காக, “ஆம்” என்று ஆங்கிலத்தில் பதில் அளித்தேன்.